சட்டப்பிரிவு 370 ரத்து, ஜிஎஸ்டி, ஒரு பதவி ஒரு ஓய்வுதியம் – நாடாளுமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை நினைவு கூர்ந்த பிரதமர்

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, பிரிவு 370 ரத்து, ஜிஎஸ்டி, ஒரு பதவி ஒரு ஓய்வுதியம் உள்ளிட்டவை நாடாளுன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் மற்றும் சாதனைகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.

பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடி இன்று தனது கடைசி உரையை நிகழ்த்தினார். அப்போது அவர்,”பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்த சிக்கல்களுக்கு எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் மற்றும் தீர்வுகளை பட்டியலிட்டார். அவர் தனது உரையில் கூறியதாவது: சட்டப்பிரிவு 370 (ரத்து) சாத்தியமாகியது என்று இந்த சபை பெருமையோடு கூறிக்கொள்ளலாம். ஜிஎஸ்டியும் இந்த சபையில் நிறைவேற்றப்பட்டது. ஒரு பதவி ஒரு ஓய்வுதியம் என்பதற்கும் இந்த சபை சாட்சியாக இருந்திருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு எந்தவித சர்ச்சையுமின்றி நாட்டில் முதல் முறையாக அனுமதிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

மேலும் தனது உரையில் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதலையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். அவர் கூறுகையில், நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அது வெறும் கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமில்லை. ஒருவகையில் அது ஜனநாயகத்தின் தாய் மீது, நமது உள்ளத்தின் உயிர் மீது நடத்தப்பட்ட தாக்குதல். நாடு ஒருபோதும் அந்தச் சம்பவத்தை மறக்காது. நாடாளுமன்றத்தையும் அதன் உள்ளிருப்பவர்களையும் காக்க தனது இன்னுயிர் நீத்தவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்” என்றார்.

இன்று இந்தியர்களின் சாதனைகள் எல்லா இடங்களிலும் பேசப்படுகிறது என்று கூறிப்பிட்ட பிரதமர், இது நாட்டின் 75 ஆண்டு கால நாடாளுமன்றத்தின் ஒறுமைப்பாட்டின் விளைவாகும் என்றார். அவர் கூறுகையில், “சந்திராயன் வெற்றி இந்தியாவை மட்டுமில்லை உலகினையே பெருமைப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம், அறிவியல், நமது விஞ்ஞானிகளின் திறன், 140 கோடி மக்களின் பலம் ஆகியவற்றுடன் இணைந்த ஒரு புதிய இந்தியாவின் வலிமையினை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த தருணத்தில் நமது விஞ்ஞானிகளை நான் மீண்டும் வாழ்த்த விரும்புகிறேன்.

இன்று நீங்கள் ஜி20 உச்ச மாநாட்டின் வெற்றியை ஒருமனதாக பாராட்டியுள்ளீர்கள். நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜி20 வெற்றி என்பது ஒரு தனிநபரின் வெற்றியோ, ஒரு கட்சியின் வெற்றியோ இல்லை. அது 140 கோடி மக்களின் வெற்றி, நாட்டின் வெற்றி. இது நாம் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய வெற்றி. இந்தியா ஜி20-க்கு தலைமையேற்றிருக்கும் போது ஆப்பிரிக்க யூனியனை ஜி20 நாடுகளில் உறுப்பினராக்கியதற்கு இந்தியா பெருமைப்படும். அந்த அறிவிப்பு வெளியான உணர்ச்சிபூர்வமான தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. அப்போது ஆப்பிரிக்க அதிபர் என்னிடம் “நான் பேசும் போது உடைந்து விடலாம்” என்று தெரிவித்ததாக கூறினார்.

டெல்லி பிரகடனம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், “ஜி20 நாடுகளின் தலைவர்களுக்கிடையே ஒரு கூட்டுப்பேச்சுவார்த்தை நடத்தியது இந்தியாவின் பலம்” என்றார். தனது உரையில் முன்னாள் பிரதமர்கள் நேரு மற்றும் வாஜ்பாயின் பேச்சினை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, பண்டிட் நேருவின் ‘ஸ்ட்ரோக் ஆஃப் மிட் நைட்’, வாஜ்பாயின் ‘அரசங்கங்கள் வரும் போகும், நாடு நிலைத்திருக்க வேண்டும்’ என்ற பேச்சுக்கள் எப்போதும் இங்கு எதிரொலித்துக்கொண்டே இருக்கும். ஆட்சியில் இருக்கும் போதே இறந்த மூன்று பிரதமர்களுமான நேரு, சாஸ்திரி, இந்திராவுக்கு இந்த நாடாளுமன்றம் சிறந்த மரியாதையைச் செலுத்தியுள்ளது” என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்புக்கூட்டத்தொடர் திங்கள் கிழமை பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் மட்டும் பழைய கட்டிடத்தில் நடக்கிறது. கூட்டத்தொடர் நாளை முதல் புதிய நாடாளுன்மன்ற கட்டித்தில் நடக்கும். இதற்கான நிகழ்ச்சி நிரல்களை, ஞாற்றுக்கிழமை நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சக் பிரகலாத் ஜோஷி எதிர்க்கட்சித் தலைவர்களுக்குத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தொடரில் மூன்று நாட்கள் மட்டுமே அலுவல் பணிக்ககாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. ஏற்கனவே பட்டியலிடப்பட்ட நான்கு மசோதாக்கள் உள்ளிட்ட 8 மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று அரசு ஏற்கனவே கூறியிருந்தது.