மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை

சமீபத்தில் பிஹார், உ.பி.,யில் கங்கை நதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்து வந்தன. அந்தச் சடலங்களை, அதிகாரிகள் மொத்தமாக ஓரிடத்தில் புதைத்தனர். இதனையடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிஹார், உத்தர பிரதேச அரசு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. அதில், ‘கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உரிமைகள், கண்ணியம் காக்க மத்திய, மாநில அரசுகள் புதிதாகச் சட்டம் இயற்ற வேண்டும். உயிரிழந்தவர்களை மொத்தமாக ஒரே குழியில் புதைப்பது, ஒரே இடத்தில் எரிப்பது போன்றவை உயிரிழந்தவர்களுக்கான உரிமையை மீறும் செயல். பில் நிலுவைத் தொகைக்காக உயிரிழந்தவரின் உடலைத் தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்தல் தடை செய்யப்பட வேண்டும். யாருமற்ற ஆதரவற்றோர் உயிரிழந்தால் அவர்களின் உடல்களைக் குறிப்பிட்ட காலம்வரை பாதுகாக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் விவரங்களை டிஜிட்டல் புள்ளிவிவரத் தொகுப்பாக மாநில அரசுகள் பராமரிக்க வேண்டும். இதற்கு தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மாநில அரசு கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும். உடல்களை அடக்கம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஆடைகளை வழங்க வேண்டும்’ எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவை அரசு மருத்துவமனையில்கூட உடல்களை உரிய முறையில் பாதுகாக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.