வெறுப்பை பரப்பும் கல்வி அமைச்சர்

ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட ஹிந்து மத நூலான ராம்சரித்மனாஸ் சமூகத்தில் வெறுப்பை பரப்புகிறது என்று ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த பீகார் மாநில கல்வியமைச்சர் சந்திரசேகர் சமீபத்தில் தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாலந்தா திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர், “ஒரு தேசம் அன்புடனும் பாசத்துடனும் மட்டுமே வளர்கிறது. ஆனால், ராம்சரிதமனாஸ், மனுஸ்மிருதி, மற்றும் மாதவ சதாசிவ கோல்வல்கரின் சிந்தனைக் களஞ்சியம் போன்ற புத்தகங்கள், சமூகத்தில் வெறுப்பையும் பிளவையும் உருவாக்குகின்றன. மக்கள் மனுஸ்மிருதியை எரித்ததற்கும், பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்குக் கல்விக்கு எதிராகப் பேசும் ராம்சரித்மனஸின் ஒரு பகுதியை புறக்கணித்ததற்கும் இதுவே காரணம். ராமசரிதமானஸ், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி அளிக்கக் கூடாது. அவர்கள் பாலைக் குடித்துவிட்டு விஷத்தைக் கக்கும் பாம்புகள் போன்றவர்கள் என்கிறது” என கூறினார். இந்த நிகழ்ச்சியில் பீகார் ஆளுநர் பாகு சௌஹானும் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் அமைச்சரின் இந்த கருத்துக்கு பா.ஜ.க பதிலளித்துள்ளது. அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்ஷாத் பூனவாலா, “அவரது இந்த பேச்சு ஒற்றுமைக்கான பேச்சு அல்ல, வாக்கு வங்கி அரசியல் பேச்சு. ஆர்.ஜே.டியைச் சேர்ந்த பீகார் கல்வி அமைச்சர் வெறுப்பைப் பரப்புகிறார். மாநில அரசு இதன் மீது நடவடிக்கை எடுக்குமா? என கேட்டுள்ளார். பா.ஜ.க ஓ.பி.சி மோர்ச்சாவின் தேசிய பொதுச்செயலாளரும், மாநில பா.ஜ.க செய்தித் தொடர்பாளருமான டாக்டர் நிகில் ஆனந்த், “பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கல்வி அமைச்சர் பேசும்போது, மத வெறுப்பின் அடிப்படையில் தனது முட்டாள்தனமான கருத்தை வெளிப்படுத்தியது மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது. அடிப்படையில், ஆர்,ஜே.டி முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசியலைச் செய்கிறது. இதுதான் இத்தகைய கருத்துக்கள் மூலம் பிரதிபலிக்கிறது” என கூறினார்.

ராமாயணக் கதையைக் கூறும் ‘ராமசரிதமானஸ்’ நூலை படித்து சரியாக புரிந்துகொள்ளாமல் அதைப்பற்றி அவதூறாகப் பேசிய அவரை உடனடியாகப் பதிவியிருந்து நீக்க வேண்டும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு ஹிந்து அமைப்புகளும் மடாதிபதிகளும் வலியுறுத்தியு வருகின்றனர். இதுகுறித்து அயோத்தி மடாதிபதி ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்யா கூறுகையில், “அவர் உடனடியாக அமைச்சர் பதவிலிருந்து நீக்கப்பட வேண்டும். மன்னிப்பும் கேட்க வேண்டும். இது நடக்காவிட்டால் அவரது நாக்கை அறுப்பவருக்கு ரூ.10 கோடி சன்மானத்தை அறிவிக்கிறேன்.” என்று தெரிவித்தார். மேலும், ராமசரிதமானஸ் வெறுப்பைத் தூண்டுபவை அல்ல. அது, மக்களை ஒருங்கிணைப்பது என்று குறிப்பிட்ட அவர், ராமசரிதமானஸ் மனிதநேயத்தை நிலைநிறுத்துவது. அது பாரத கலாசாரத்தின் உருவமாக உள்ளது. நாட்டின் பெருமிதமாக விளங்குவது. இதுபோன்ற கருத்துகளைச் சகித்துக்கொள்ள முடியாது” என குறிப்பிட்டார்.