ராமர் பாலம் வழக்கு விசாரணை

இந்தியா, இலங்கை இடையே, கடல் வழி போக்குவரத்தையும் வர்த்தகத்தையும் மேம்படுத்துவதாகக்கூறி, சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த காங்கிரஸ் கூட்டணி அரசு திட்டமிட்டது. அங்கு, ஹிந்துக்கள் புனிதமாக கருதும் ராமர் பாலம் இருப்பதால் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ.க எம்.பி சுப்பிரமணியன் சாமி, கடந்த 2007ல் இத்திட்டத்திற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ராமர் பாலத்தை இடித்தோ, அதற்கு சேதம் விளைவிக்கும் வகையிலோ, எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது. ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிக்க வேண்டும் என அதில் கோரப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன், இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரிக்க, அதிக அவகாசம் தேவைப்படுவதாலும் தான் வரும் 23ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுவதாலும் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள என்.வி. ரமணா, வரும் 26 முதல் இந்த மனுவை விசாரிப்பார் என தலைமை நீதிபதி பாப்டே உத்தரவிட்டார்.