திருமலையானுக்கே ராமானுஜரின் கடிதம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம்?
ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கும்அம்மையார் வைணவ ஆச்சார்யார் ஸ்ரீ ராமானுஜரிடம் தெரிவித்த81 கருத்துக்கள்தான் இந்த ரகசியம்.

ஒருநாள் ராமானுஜர் திருப்பதி மலை அடிவாரத்தில் சீடர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மோர் விற்கும் பெண்மணி ‘சாமி, நல்ல மோரு, குடிச்சீங்கன்னா தெம்பா இருக்கும். உஷ்ணமெல்லாம் ஓடிப்போயிடும்’ என கூறி மோரை விற்றாள். அப்போது அவள் மனதில் இவர்களைப் போல நாமும் பக்தியில் திளைக்க வேண்டும் என்று எண்ணம் உண்டாயிற்று. திடீரென்று அப்படி பக்தி உணர்வு எழுந்தது ஏன்? மகான்களின் பார்வை விசேஷம் அப்படிப்பட்டது. ‘நீ எங்களுக்குக் கொடுத்த மோரின் விலை என்ன?’ என்று கேட்டார் ராமானுஜர்.

‘காசெல்லாம் வேணாம் சாமி, மோட்சம் கிடைக்கணும்’ என்றாள். இந்தக் கோரிக்கையை ராமானுஜரே எதிர்பார்க்கவில்ல. ‘கவலைப்படாதேம்மா, உன் நல்ல குணத்திற்கு மோட்சம் கிடைக்கும், போய் வா’ என்றார். ஆனால் அந்தப் பெண்மணி விடவில்லை. ‘சாமி மேலே இருக்கிற பெருமாள்கிட்ட போய் எத்தனையோ தடவை மோட்சம் வேணும்னு கேட்டேன். ஆனா அவர் வாயைத் தொறந்து பேசமாட்டேங்கிறார், அந்த மோட்சம் கிடைக்கிறதுக்கு நீங்க ஒரு வழியைக் காட்டுங்க.போய்ச் சேர்றேன்’ என்றாள். ராமானுஜர் அவளிடம் ‘நீ நினைப்பது போல் மோட்சத்திற்கு வழிகாட்டுவதற்கோ, மோட்சம் வழங்குவதற்கு உண்டான தகுதியோ, எனக்கில்லை.

மேலே திருமலையில் இருக்கிறானே, அவன் கிட்ட போய்க் கேள். உனக்கு வேண்டியதை அருளுகின்ற தகுதி அவனுக்குத்தான் உண்டு’ என்றார். இதற்குப் பிறகும் மோர்க்காரப் பெண்மணி விடவில்லை. ‘சாமி, எனக்கு மோட்சம் தரச் சொல்லி பெருமாள் கிட்ட சிபாரிசு செஞ்சு ஓலை எழுதித் தரணும். உங்களை மாதிரி பெரிய
வங்க கொடுத்தாதான் பெருமாள் சாமி கேட்பாரு’ என்றாள். இதற்கு மேலும் மறுக்க முடியாததால், முகவரியில் வெங்கடேசப் பெருமாள், திருமலை என்று குறிப்பிட்டு பெண்மணியின் கோரிக்கையை எழுதி, தன் கையெழுத்தையும் போட்டுக் கொடுத்தார்.

அந்தப் பெண்மணி ஆனந்தமாக திருமலை நோக்கிப் புறப்பட்டாள். பெருமாள் சன்னதி அர்ச்சகர்களிடம் சிபாரிசு கடிதத்தைக் கொடுத்தாள். அர்ச்சகர்கள் ராமானுஜர் கொடுத்த ஓலை என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் பெருமாளின் காலடியில் சமர்ப்பித்தனர். ராமானுஜரின் சிபாரிசை ஏற்றுக் கொண்ட பெருமாள் மோர்க்காரியை வைகுண்டத்திற்கு அழைத்துக்கொண்டார். ராமானுஜரை, உடையவர் என்று கொண்டாடுவதன் சூட்சமத்தையும் தெய்வபக்தி சாதிக்காததை குரு பக்தி சாதிக்கும் என்பதையும் உணர்த்தும் சம்பவம் இது.
– சங்கீதா சரவணகுமார்