வித்தையின் விலை

ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒருமுறை கங்கைக் கரையில் தியானத்தில் அமர்ந்திருந்தார். தியானம் முடிந்து கண் திறந்தபோது, ஒருவர் நீர் மேல் நடந்து வருவதைக் கண்டார். இதைப் பார்த்து ராமகிருஷ்ணர் நகைத்தார்.
அந்த மனிதர் ராமகிருஷ்ணர் அருகே வந்து, ‘‘இந்தக் கடினமான வித்தையை நான் பத்து ஆண்டுகளாக முயன்று கற்றுத் தேர்ந்துள்ளேன்; இதைக் கண்டு நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.
‘‘இல்லை, நீர் கற்ற வித்தை காலணாவுக்குத்தான் பயன்படும். அதற்கு பத்தாண்டுகள் கஷ்டப்பட வேண்டியதில்லை” என்று பதில் கூறினார் ராமகிருஷ்ணர். ”அதென்ன அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று மீண்டும் கேட்டார் அம்மனிதர்.
‘‘காலணா கொடுத்தால் படகில் அக்கரையைக் கடந்து விடலாமே!’’ என்று பதில் அளித்தார் ராமகிருஷ்ணர்.