நீதிமன்ற வழக்கு

அயோத்தி ஸ்ரீ ராம ஜென்ம பூமி சம்பந்தமாக ஐந்து வழக்குகள் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் நிலுவையில் இருந்தது.

முதல் வழக்கு
கோபால் சிங் விசாரத் என்பவர் 1950ல் ஜனவரி 15ந் தேதி தொடுத்த வழக்கு. வழக்கு எண். 2\1950 என அறியப்படுகிறது. இவர் தனது வழக்கில் கோரியிருந்ததாவது – தாம் ஸ்ரீ ராம ஜென்ம பூமியினுள் சென்று எவ்விதத் தடையுமின்றி ஸ்ரீ ராமபிரானை வழிபட நீதி மன்றம் ஏற்பாடு செய்யவேண்டும்.
ஸ்ரீராம ஜன்ம பூமியினுள் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹங்களை யாரும் அகற்ற முடியாதபடி நிரந்தரத் தடை விதிக்கவேண்டும்.வழக்கில் பிரதிவாதிகளாக ஐந்து முஸ்லிம்கள், உ.பி. மாநில அரசு, பைசாபாத் டெபுடி கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டெண்டெண்ட் ஆகியோர் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பைசாபாத் சிவில் கோர்ட் பிறப்பித்து பின்னர் அது அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சினால் 1951 மார்ச் 3ல் மீண்டும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது அயோத்தி
யைச் சேர்ந்த 13 முஸ்லிம்கள் சர்ச்சைக்குரிய கட்டிடம் ஜென்மபூமியில் இருந்த ஓர் ஆலயத்தை இடித்தே கட்டப்பட்டது எனவும் அதை ஹிந்துக்கள் வசம் ஒப்படைப்பதால் தங்களுக்கு எவ்வித ஆட்சேபணையும் கிடையாது என்பதனையும் தெளிவுபடுத்தி அபிடவிட் தாக்கல் செய்தனர்.

இரண்டாவது வழக்கு:
திகம்பர் அகாடாவின் தலைவர் பரமஹம்ஸ ஸ்ரீ ராமச்சந்திரதாஸ் அவர்கள் மேலே கூறிய அதே விஷயத்தை வலியுறுத்தி விக்ரஹங்கள் அகற்றப்படக்கூடாது என்பதனை வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 1950 டிசம்பர் 5ம்தேதி தொடரப்பட்டது. இது வழக்கு எண். 12 \ 1950 என அறியப்படுகிறது.
இவரது வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் விக்ரஹங்களை அகற்றக்கூடாது என 1955 ஏப்ரலில் தடைவிதித்தது. ஹிந்துக்
களது வழிபாடு தொடர அனுமதி தந்து தீர்ப்பு வெளியிட்டதும் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தமானது என்ற இறுதித் தீர்ப்பு வரும் வரை இது செல்லும் என நீதிமன்றம் கூறியது.
இந்த வழிபாட்டு இடத்திலிருந்து 200 கஜ சுற்றுப்புற தூரத்தில் முஸ்லிம்கள் யாரும் வரக்கூடாது எனவும் நீதிமன்றம் தடை
விதித்தது. இந்த இரண்டு முடிவுகளையும் எதிர்த்து முஸ்லிம் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் 1955 ஏப்ரல் 26ந் தேதி தள்ளுபடி செய்தது.

மூன்றாவது வழக்கு:
1959ல் நிர்மோஹி அகாடா என்ற அமைப்பு ஸ்ரீ ராம ஜன்ம பூமி தங்களுக்குச் சொந்தமானது என்றும், எனவே அங்கு பூஜை மற்றும் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள நீதிமன்றம் நியமித்துள்ள ரிசீவரை விலக்கி விட்டுத் தங்கள் மடத்திடம் அப்பொறுப்பினை ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டு வழக்கு தொடர்ந்தது.

நான்காவது வழக்கு:
உத்திரப்பிரதேச மாநிலத்தின் சன்னி முஸ்லிம் வக்ப் வாரியம் தொடர்ந்தது. இவ்வழக்கில் சர்ச்சைக்குரிய கட்டிடமும், அதன் பூமியும் தங்களது வாரியத்தின் கீழ் வரும் மசூதிக்குச் சொந்தமானது எனவும், அக்கம்பக்கத்து பூமி கபர்ஸ்தான் எனவும் அதுவும் தங்களுக்கே சொந்தமானது எனவும் கூறியிருந்தனர்.
இவ்வழக்கு சர்ச்சைக்குரியதாக கட்டிடம் அறிவிக்கப்பட்டு 11 ஆண்டுகள், 11 மாதங்கள், 26 நாட்கள் கழித்து தொடரப்பட்டதால் டிக்லரேஷன்  ஸூட்டில் ஆறு ஆண்டுகளுக்குள் உரிமைகள் கோரப்பட்டிருக்க வேண்டும். எனவே இது காலாவதியானது என்பதால் நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்கக் கூடாது என பரமஹம்ஸ ஸ்ரீ ராமச்சந்திரதாஸ் அவர்கள் மனு ஒன்றினைக் கொடுத்தார். நீதிமன்றம் அவர் மனுவை தள்ளுபடி செய்து சன்னி முஸ்லிம் வக்ப் வாரியத்தின் வழக்கினை ஏற்றது. இதனைத் தலை வழக்காகவும் ஆக்கியது. இது வழக்கு எண் 12\1961 என அறியப்படுகிறது.

ஐந்தாவது வழக்கு:
அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தேவகிநந்தன் அகர்வால் ஸ்ரீ ராமஜன்ம பூமியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ராமர் சட்டப்படி ஸ்ரீ ராம ஜன்ம பூமிக்கு சொந்தக்காரர் என்பதால் அவரை வழக்கில் சேர்க்காமல் எந்த வழக்கையும் நடத்த முடியாது என வாதிட்டார். அயோத்தியே ஸ்ரீ ராமருக்கு சொந்தமாதலால் தாம் ஸ்ரீ ராமரின் அன்யோன்ய நண்பர் என்ற முறையில் ஸ்ரீ ராம ஜன்மபூமியில் ஆலயம் எழுப்புவதை எதிர்த்துப் போடப்பட்டுள்ள வழக்குகள் செல்லுபடியாகாதவை என்று நீதிமன்றம் அறிவிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு 1989 ஜூலை மாதத்தில் தொடரப்பட்டது.
இந்த வழக்கை ஏனைய வழக்குகளோடும் சேர்த்து அனைத்தையும் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றவேண்டும் என்ற அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து அனைத்து வழக்குகளும் உயர் நீதிமன்றம் முன் வந்துவிட்டன. இந்த வழக்குகளின் முதல் விசாரணை உயர் நீதிமன்றத்தில் 1989 ஆகஸ்டு 14 ஆம் தேதி நடைபெற்றது.
சன்னி முஸ்லிம் வக்ப் வாரியத்தின் வழக்கை ஏற்றது தவறு என்ற பரமஹம்ஸ ஸ்ரீ ராமச்சந்திர தாஸின் அப்பீலை உயர் நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தாலும் 1950ல் தாம் தொடர்ந்த வழக்கில் 40 ஆண்டுகள் ஆகியும் எவ்வித இறுதித் தீர்ப்பும் தரப்படாததாலும், தனக்கு வயதாகிவிட்டதால் தன் ஆயுட்காலத்தில் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லாததாலும் தமது வழக்கைத் திரும்ப பெற்றுக் கொள்வதாகக் கூறி வழக்கினை வாபஸ் பெற்றார் பரமஹம்ஸ்ஜி. இது நடந்தது 1990 ஆகஸ்ட் 23ல். இந்த வழக்குகள் அனைத்தையும் செல்லு படியாகாத தாக்க மத்திய அரசு 1993 ஜனவரி 7ல் அவசரச் சட்டம் பிறப்பித்து – உச்ச நீதிமன்றம் சென்றது. ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்குகளைத் திரும்பவும் உயர் நீதிமன்றத்திற்கே அனுப்பிவிட்டது.

1996ல் அனைத்து வழக்குகளின் சாராம்ச விஷயமாக ‘ஸ்ரீராம ஜன்மபூமியில் மசூதி போன்று தோற்றமளிக்கும் கட்டிடம் கட்டப்படும் முன்பாக அந்த இடத்தில் ஹிந்து சமய சம்பந்தப்பட்ட கட்டிடம் ஏதாவது இருந்ததா? என்பது உயர் நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு அகழ் வாராய்ச்சிக்கு உத்தரவிடப்பட்டது. அகழ் வாராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் நீதி மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

– ஆர்.பி.வி.எஸ். மணியன்