பொதுத்துறை கொள்கை வேடிக்கையானது அல்ல

டெல்லியில் நடைபெற்ற வருடாந்திர ரைசினா பேச்சுவார்த்தை கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசுகையில், பொது சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை நிராகரித்தார். மேலும், “பாரதத்தில் தனியார் துறையின் செயல்பாட்டில் இல்லாத துறைகள் என்று எந்தவொரு துறையும் கிடையாது. பொதுத்துறை கொள்கை என்பது வேடிக்கையான ஒன்று அல்ல. அரசு எல்லாவற்றையும் வெறுமனே விற்று கொண்டிருக்கவில்லை. அதன் பொருளை எதிர்க்கட்சியினர் முழு அளவில் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர். ஆனால், நாங்கள் விற்று கொண்டிருக்கிறோம் என வெளியில் கூறி கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவற்றை விற்கவில்லை. பாரதத்தின் நீடித்த வளர்ச்சிக்கான காரணங்களாக, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்கள் அடங்கிய துடிப்பான சமூகம், நடுத்தர வர்க்கத்தினரும் விநியோகிப்பவர்களாக மாறியிருப்பது, தொழில்நுட்பம் சார்ந்த முதலீடுகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு, பொதுமக்களுக்காக அமைக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை உள்ளன. ஜி20 மாநாட்டில் உலகளாவிய தெற்கின் குரலை பாரதம் முன்வைத்து கொண்டுள்ளது. இந்த ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ளவர்கள், அரசியல் மற்றும் பொருளாதார கூட்டணி காரணிகளால் ஆபத்து ஏற்படாத வகையில், பல்வேறு நாடுகளுக்கும் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன என பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வர்த்தகத்திற்கான இறுதி மையம் ஆக பாரதம் தற்போது உள்ளது” என்று தெரிவித்தார்.