பிரதமரின் உரை

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தி பிரதமர் தனது உரையைத் தொடங்கி 100 நிமிடங்கள் உரையாற்றினார். அதில் சில அம்சங்கள்:

  1. ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்: பாரதம் சுதந்திரமைடைந்த இந்த 75 வருட கொண்டாட்டத்தில், வரும் ஆண்டுகளில் பாரதம் எவ்வாறு உலகளாவிய தலைமையை வகிக்க முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் பாரதம் பல வளர்ச்சிகளை எட்டியுள்ளது என தெரிவித்தார்.
  2. மக்கள் நலத் திட்டங்கள்: ஏழைகளுக்கு எரிவாயு இணைப்பு, வங்கிகள் மூலம் நேரடிப் பணப் பரிமாற்றம் என செயல்படுத்தப்பட்ட திட்டங்களை குறிப்பிட்டார்.
  3. வெற்று எதிர்ப்பு: ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தையும், முற்போக்கான விமர்சனத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய மோடி, அனைத்து அரசுக் கொள்கைகளுக்கும் எதிர்கட்சிகளின் கண்மூடித்தனமான எதிர்ப்பை சாடினார்.
  4. மகாராஷ்டிர அரசு: கொரோனா பரவலின்போது சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசு, மக்களை எப்படியெல்லாம் அலைகழித்தது என விளக்கி வேதனை தெரிவித்தார்.
  5. மக்கள் விரோத அரசு: அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, பொதுமக்களையும், புலம் பெயர்ந்தோர்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருவதையும் மோசமான அணுகுமுறைகளையும் இடித்துரைத்தார்.
  6. கொரோனாவில் எதிர்கட்சிகள்: கொரோனா பரவலின்போது எதிர்கட்சிகள் செய்த மலிவான அரசியலையும், அதனை பரப்ப பயன்படுத்திய ‘டூல்கிட்டையும்’ மோடி நினைவுபடுத்தினார்.
  7. உணவு தானியங்கள்: கடுமையான கொரோனா நெருக்கடி காலத்திலும், தேசமெங்கும் உள்ள 80 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு இலவச ரேஷன் பொருட்களை வழங்கியதை எடுத்துரைத்த மோடி, எந்த ஒரு இந்தியனும் பட்டினி கிடக்கக் கூடாது என்பது எங்களது நிலைப்பாடு என கூறினார்.
  8. பொருளாதார சீர்திருத்தங்கள்: கொரோனா, உலக பொருளாதாரம் உள்ளிட்ட பல பிரச்சனைகளின்போதும், அவற்றை மீறி மத்திய அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள், விவசாயிகளுக்கு உரங்கள், மானியம் போன்ற பல மக்கள் நலத் திட்டங்களை விளக்கிய மோடி, சிறு விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக உள்ள எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சித்தார்.
  9. மாபெரும் உள்கட்டமைப்பு: பிரத்யேக சரக்கு வழித்தடங்கள், விரைவு ரயில்கள், பிரமாண்ட கதி சக்தி மாஸ்டர் பிளான் போன்றவை குறித்து பேசிய பிரதமர், உள்கட்டமைப்பு அதிகரிப்பு எவ்வாறு தேச முன்னேற்றத்தில், பொருளாதார வளர்ச்சியில் பங்கு வகிக்கிறது என்பதை விளக்கினார்.
  10. தொழில் வளர்ச்சி: பட்ஜெட்டில் ரூ. 5 லட்சம் கோடியுடன் நீட்டிக்கப்பட்ட அவசரக் கடன் உத்தரவாத வரித் திட்டத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். எம்.எஸ்.எம்.இக்களின் மறுமலர்ச்சிக்கு இது எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கினார். வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப், யூனிகார்ன்கள் குறித்தும் பேசினார்.
  11. பயமுறுத்தும் அணுகுமுறை கூடாது: நமது தேசத்தின் இளைஞர்களையும், தேசத்தின் வளர்ச்சிக்கு உதவுபவர்களையும், தொழில்முனைவோரையும் பயமுறுத்தும் அணுகுமுறையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை கேலி செய்தவர்கள், தாங்களே கேலிப் பொருளாகிவிட்டனர் என்றார் மோடி.
  12. பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பர்: பாதுகாப்புத் துறையை பாதிக்கும் பல்வேறு சிக்கல்களை எடுத்துரைத்த பிரதமர், வெளிநாடுகளைச் சார்ந்து இருப்பதால் தளவாடங்கள், உதிரி பாகங்களுக்காக நாடு எவ்வாறு போராட வேண்டியிருந்தது என்பதையும், பாரதத்தின் பாதுகாப்புத் துறையின் எதிர்காலத்தில் ‘மேக் இன் இந்தியா’ எவ்வாறு ஒருங்கிணைந்ததாக இருக்கும் என்பதையும் பட்டியலிட்டார். இந்த விவகாரத்தில் முந்தைய அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் விமர்சித்தார்.
  13. பணவீக்கம்: நேருவை மேற்கோள் காட்டி, எதிர்க்கட்சிகளைத் தாக்கி பேசிய மோடி, 2009 முதல் 2014வரை அவர்களின் ஆட்சிக் காலத்தில் நாடு எவ்வாறு இரட்டை இலக்க பணவீக்கத்தை எதிர்கொண்டது, கொரோனா போன்ற இக்கட்டான சூழலிலும், தற்போதைய அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்தி 5 சதவீதத்திற்கு கீழ் இருப்பதை எவ்வாறு உறுதி செய்தது என்பதையும் விளக்கினார்.
  14. ராகுலுக்கு கண்டனம்: பாரதத்தின் தேசியம் குறித்த ராகுலின் கருத்து குறித்து பேசிய பிரதமர், இதனால் மக்களவையில் ஜனநாயகம் அவமதிக்கப்பட்டது என்றார். ராஷ்டிரம் என்பது பாரதியர்களின் ஆன்மா, ஒவ்வொரு பாரத தேசத்தவரும் அந்த ஆன்மாவுடன் இணைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதைத்தவிர, காங்கிரஸ் பிரிவினை அமைப்புகளின் தலைமையாக செயல்படுகிறது. ஆங்கிலேயர்கள் போய்விட்டாலும் அவர்களின் பிரித்தாளும் கொள்கையை காங்கிரஸ் தன் குணாதிசயமாக மாற்றிக்கொண்டுவிட்டது. வாரிசு அரசியலைத் தாண்டி அது வறெதையும் பார்த்த்தில்லை. காந்தியே காங்கிரசை விரும்பவில்லை. காங்கிரஸ் இல்லாமல் இருந்தால் அவசர நிலை வந்திருக்காது, சீக்கியர் படுகொலை நடந்திருக்காது.  அடுத்த 100 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது, தொடர்ச்சியான தோல்விகள் இருந்தபோதிலும், அதன் ஆணவத்தை போக்கிக்கொள்ள மறுக்கிறது என சாடினார். பிபின் ராவத்தின் உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது அவருக்கு தமிழக மக்கள் அஞ்சலி செலுத்தியதை பாராட்டிய பிரதமர், தமிழர் உணர்வுகளை காங்கிரஸ் புண்படுத்தியதாக குற்றம் சாட்டினார். விஷ்ணு புராணத்திலிருந்தும், பாரதியாரின் கவிதைகளில் இருந்தும் மேற்கோள்களை காட்டி உரையாற்றினார்.