அமைதியும் நல்லிணக்கமும் ஒரு கை ஓசையல்ல

கர்நாடகாவில், ஹிஜாப் பிரச்சனை, பந்த், வன்முறை, ஹிந்து அமைப்பினர் மீதான தாக்குதல்கள், கொலைகள் உள்ளிட்ட பல விரும்பத்தகாத சம்பவங்களை அங்குள்ள முஸ்லிம்கள் தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர். இதனையடுத்து, அங்குள்ள ஹிந்துக்களும் ஹிந்து அமைப்புகளும், உடுப்பியில் உள்ள மாரிகுடி கோயில் உள்ளிட்ட ஹிந்து கோயில்களின் திருவிழாக்களில் ஹிந்து வியாபாரிகள் மட்டுமே கோயில் வளாகத்தைச் சுற்றி தற்காலிக கடைகள் வைக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்தனர்.

ஹிந்துக்களின் ஒற்றுமையையும் ஹிந்துக்களை எதிர்த்தால் தங்கள் பிழைப்பில் மண் விழும் என்பதையும் அறிந்த மாற்றுமத அமைப்புகள், வேறு வழியின்றி, உடுப்பியில் உள்ள பெஜாவர மடத்தின் தலைவர் ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிஜியை நேரில் சந்தித்து இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என முறையிட்டன. ‘உடுப்பி ஜில்லா சவுகார்த சமிதி’ என்ற பதாகையின் கீழ் முஸ்லீம், கிறிஸ்தவ வணிகர்கள் கடந்த புதன்கிழமை இதற்காக சுவாமிஜியை சந்தித்தனர். கடந்த காலங்களை போலவே தாங்களும் கோயில் திருவிழாக்களில் கடை அமைக்க  உதவிட கோரிக்கை விடுத்தனர்.

சுவாமிஜியும் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். இதுகுறித்து பேசிய அவர், ‘அமைதியும் நல்லிணக்கமும் அவசியம் என்றாலும், அது ஒருதலைப்பட்சமான விஷயமாக இருக்க முடியாது. ஓயாத அநீதியானது வலியையும் ஏமாற்றத்தையும் விளைவிக்கிறது. அது எப்போதாவது வெடித்துவிடும். ஹிந்து சமூகம், தான் அனுபவித்த அனைத்து வலிகளாலும் சோர்ந்துபோய் இன்று வெடித்து சிதறியுள்ளது. பல விரும்பத்தகாத சம்பவங்களால் ஹிந்து சமூகம் மிகுந்த வேதனையில் உள்ளது.

சில மதத் தலைவர்களின் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இதற்கு கீழ்மட்டத்தில் இருந்து தீர்வு காணப்பட வேண்டும். நாம் ஒரு பொதுவான மன்றத்தில் அமர்ந்து இதன் காரணத்தை விவாதிக்க வேண்டும். ஹிந்து சமூகத்தை புண்படுத்தும் சம்பவங்கள் எதுவும் இல்லை என்றால் மட்டுமே நல்லிணக்கம் வளரும் என்று எதிர்பார்க்கலாம். வலியின் எல்லைக்கு கொண்டு சென்றுவிட்ட பிறகு, சமூக நல்லிணக்கத்துடன் எல்லோரும் வாழ்வோம்’ என்று சொன்னால் அது நடக்காது.  ஒரு சமூகத்தில் அமைதி, நல்லிணக்கத்திற்கு எந்த தலையீடும் தேவையில்லை.

அநீதிக்கு காரணமானவர்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும்; அந்த சமூகம் தவறு செய்த தங்கள் உறுப்பினர்களை தண்டிக்கட்டும். அந்த சமூகம் அந்த தவறுகளுக்கு எதிராக போராடட்டும். ஒருவரின் தவறு ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கிறது’ என கூறினார்.