ஐக்கிய அரபு அமீரக கன்டெய்னரில் இருந்த ரூ.26.8 கோடி மதிப்புள்ள ஓவியங்கள், பழங்காலப் பொருட்கள் பறிமுதல்

முத்ரா துறைமுகத்தில் கைப்பற் றப்பட்ட பழங்கால பொருட்கள்

அகமதாபாத்: ஐக்கிய அரபு அமீரக நாட்டிலிருந்துவந்த கன்டெய்னரில் இருந்த ரூ.26.8 கோடி மதிப்புள்ள பழங்காலப் பொருட்கள், ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் (டிஆர்ஐ) எடுத்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள முத்ரா துறைமுகத்துக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகருக்கு அருகிலுள்ள ஜெபேல் அலிதுறைமுகத்திலிலிருந்து ஒரு கன்டெய்னர் அண்மையில் வந்தது. சந்தேகத்தின் பேரில் இந்த கன்டெய்னரை டிஆர்ஐ அதிகாரிகள் திறந்து சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் கன்டெய்னரில் இருந்து மிகவும் பழங்காலத்தைச் சேர்ந்த சிலைகள், பழங்காலப் பொருட்கள், பாத்திரங்கள், ஓவியங்கள், பழங்கால மரச்சாமான்கள், விலைமதிப்பற்ற பாரம்பரியப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.26.8 கோடியாகும்.

இதுகுறித்து டிஆர்ஐ அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தப் பழங்காலப் பொருட்களில் சில 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. விலைமதிப்பற்றவை. இதில் தங்கம், வெள்ளி, தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட பொருட்கள் போன்றவை இருந்தன. பிரிட்டன், நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தயாரான இந்தப் பொருட்கள் கண்டெய்னர் மூலம் இந்தியா வந்துள்ளது.

சுங்க வரியைத் தவிர்ப்பதற்காக இந்தப் பொருட்களின் மதிப்பு குறைத்துக் காட்டப்பட்டுள்ளது. கள்ளச் சந்தையில் இதுபோன்ற பொருட்களுக்கு அதிக மதிப்பு இருப்பதால் குறைந்த விலையைக் குறிப்பிட்டு கன்டெய்னரில் அனுப் பப்பட்டுள்ளன.

சுமார் ரூ.26.8 கோடி மதிப்புள்ள இந்தப் பொருட்களை அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.