ஆமாம்! நாங்க தமிழ்ச் சங்கி தான் – 6

சங்க இலக்கியங்களில் திருமால் பெருமை

வேதத்தின் உட்பொருளாக இருப்பது விஷ்ணு எனப்படும் திருமால் என்பதை வடமொழி இலக்கியங்களைக் காட்டிலும் அதிகமாகவே பழங்காலச் சங்கத்தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. பரிபாடலின் முதல் பாடலே, திருமாலை “நாவல் அந்தணர் அருமறைப் பொருளே” என்று அழைக்கிறது. புலவர் கடுவன் இளவெயினனார் பாடிய பரிபாடலின் மூன்றாம் பாடலில், “அனைத்தும் நீ, அனைத்தின் உட்பொருளும் நீ, அமரர்க்கு முதல்வன் நீ, அவுணர்க்கும் முதல்வன் நீ” என்று திருமால் போற்றப்படுகிறார்.

அமரர் என்றால் ஆரியர் என்றும் அரக்கர் (அவுணர்) என்றால் திராவிடர் என்றும் இல்லாத இனவாதம் மொழிவோருக்கு இந்தப் பாடல் வரிகளே பதிலடிகள். இறைவன் அனைத்துமாகி நிற்பவன், எதிரும் புதிருமான அமரர்களுக்கும் அவனே தலைவன், அரக்கர்களுக்கும் அவனே தலைவன். திருமால் நீலமணி போன்ற நிறமுடைய திருமேனி கொண்டவர், விண்ணளவு உயர்ந்த கருடக் கொடியைக் கொண்டிருப்பவர், எப்போதும் வெற்றியை விரும்புபவர் என்பதை மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார் பாடிய புறநானூற்றுப் பாடல் (எண் 56) எடுத்துரைக்கிறது. “மண்ணுறு திரு மணி புரையும் மேனி, விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோன்” என்கின்றன அப்பாடல் வரிகள்.

இதேபோல், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடிய மற்றொரு பாடல் (எண் 58) திருமாலின் அவதாரமான கிருஷ்ணன், நீல நிற மேனி கொண்டவர் என்பதை “நீல்நிற உருவின் நேமியோன்” என்ற வரிகளால் குறிப்பிடுகிறது. நேமி என்றால் சக்கரம், இதன்மூலம் திருமால் சக்ரபாணி என்பதையும் புலவர் எடுத்துரைக்கிறார். இதே பாடலில், கிருஷ்ணரின் அண்ணனான பலராமனை பால் போன்ற வெள்ளை நிறம் கொண்டவர் என்பதையும், அவரது கொடி பனைமரச் சின்னம் பொறித்தது என்பதையும், “பால்நிற உருவின் பனைக்கொடியோன்” என்ற வரிகளால் புலவர் குறிப்பிடுகிறார்.

இதே புலவர் காரிக்கண்ணனார், பாண்டியன் நன்மாறனைப் புகழ்ந்து பாடிய மற்றொரு பாடலில் (எண் 57), தன்னைப் புகழ்வோருக்கு பாரபட்சமின்றி விரும்பியதைக் கொடுப்பதில் மாயோன் எனப்படும் திருமாலுக்கு நிகரான புகழ் படைத்தவன் பாண்டிய மன்னன் என்கிறார். “வல்லா ராயினும் வல்லுந ராயினும் புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற” என்பன அவ்வரிகள்.சிவபெருமானுக்கு எவ்விதம் திருவாதிரை நட்சத்திரம் சிறப்பானதோ, அதேபோல் திருமாலுக்கு திருவோண நட்சத்திரம் சிறப்பானது. இந்தத் திருவோணத் திருநாள் (ஓணம் பண்டிகை) அக்காலத்தில் தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்பதை புலவர் மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சி மூலம் நாம் அறியலாம். அவுணர்களை (அரக்கர்களை) மாய்த்தமாயோனுக்கு திருவோண நாளிலே சிறப்பான வழிபாடு நடைபெறும் என்பதை “கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் மாயோன் மேயஓண நன்னாள்” என்ற வரிகள் மூலம் புலவர் நவில்கிறார்.

திருவோணம் என்றதுமே திருமாலின் வாமன அவதாரம் நினைவுக்கு வரும். மகாபலி (மாவலி) சக்ரவர்த்தியிடமிருந்து பூமியை மீட்பதற்காக, வாமனராய் வந்து விஸ்வரூபம் எடுத்த திருவிக்ரம அவதாரத்தையும் சங்க இலக்கியங்கள் திகட்டாத தமிழில் எடுத்துச் சொல்கின்றன. முதலில், திருமாலுக்கு உரிய முல்லை நிலத்தின் பெருமையைக் கூறும் முல்லைப்பாட்டு என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்:

நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடுவலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கைநீர் செல, நிமிர்ந்த மாஅல், போல, சக்கரமும், வலம்புரிச்சங்கும் பொறித்த திருக்கரங்களும், திருமகள் தங்குகின்ற மார்பும் உடைய திருமாலானாவர், வாமனராய் வந்துமாவலியிடம் பூமியைத் தானமாகக் கேட்டபோது, அவரது கரங்களில் தாரை வார்த்துக் கொடுப்பதற்காக நீர் செல்லச் செல்ல, விண்ணளவு உயர்ந்து உலகத்தையே வளைத்தெடுத்து வாங்கினார் என்று புலவர் குறிப்பிடுகிறார்.

இதே புராணச் சம்பவத்தை, பெரும்பாணாற்றுப்படையில் (வரிகள் 29––30) புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் உரைக்கிறார். “இருநிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன்” என்கிறார். ஒரு கால் பூமியிலும் மறு கால் ஆகாயத்திலுமாக இரு நிலம் கடந்த திருமால், திருமகளை மறு போல (பச்சைக்குத்தியதைப் போல) மார்பிலே தாங்கியவர், முந்நீர் எனப்படும் கடலின் நிறமான நீலவண்ணம் கொண்டவர் என்ற பல சுவையான தகவல்களை இந்தப் பாடல் வரிகள் தருகின்றன. கலித்தொகையின் 104ம் பாடலிலும் (10 ம் வரி) திருமால், திருமறு மார்பன் என்றுரைக்கப்படுகிறார்.

கடுவன் இளவெயினனார் பாடிய பரிபாடல் (பாடல் எண் 4) நரசிம்ம அவதாரத்தை நன்றாக விளக்குகிறது. இப்பாடலின் “பிருங்கலாதன் பலபல பிணிபட” என்ற வரி, திருமாலைப் புகழ்ந்ததால் பிரகலாதன் அவனது தந்தை இரணியனால் பல்வேறு துன்பங்களை அனுபவித்தான் என்பதை எடுத்துரைக்கிறது. “வெடிபடா ஒடிதூண் தடியொடு, தடிதடி பலபடவகிர் வாய்த்த உகிரினை” என்ற அடுத்த சிலவரிகள், தூணைப்பிளந்து கொண்டு வெடியோசையோடு நரசிம்மனாக வெளிக்கிளம்பி, இரணியன் உடலை நகத்தால் திருமால் கிழித்தெறிந்த கோலத்தை வர்ணிக்கின்றன.

இதற்கு முந்தைய மூன்றாம் பாடலில் வராக அவதாரத்தையும் புலவர் இளவெயினனார் இயம்புகிறார். “ஊழி ஆழிக்கண் இரு நிலம் உருகெழு கேழலாய் மருப்பின் உழுதோய்” என்கிறார். ஊழி எனப்படும் பிரளய காலத்திலே நீரிலே பூமியானது மூழ்கிப்போனபோது, கேழல் (வராகம் எனப்படும் பன்றி) அவதாரம் எடுத்து பூமியை மீட்டவர் திருமால் என்பது இதன் பொருள். மதுரை மருதன் இளநாகனார் பாடிய அகநானூற்றுப் பாடல் (எண் 220), பரசுராம அவதாரம் குறித்துப் பகர்கின்றது.
கெடாஅத் தீயின் உருகெழு செல்லூர்க்
கடாஅ யானைக் குழுஉச்சமந் ததைய
மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன் றரிதினின் முடித்த வேள்விக்
கயிறரை யாத்த காண்டகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல

“எப்போதும் வேள்வித் தீ எரிகின்ற சிறப்பையுடைய செல்லூர் என்ற இடத்திலே, மத யானைக் கூட்டத்தை போர் முனையிலே அழித்து, (தனது தந்தையைக் கொன்ற) மன்னர் பரம்பரையையே ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டிய, மழுவையும் (கோடரியையும்) வாளையும் ஏந்திய நெடியோனாகிய பரசுராமர், இந்த வெற்றியைத் தொடர்ந்து அரிய வேள்வியைச் செய்தார். அந்த வேள்விச் சிறப்பை விளக்குவதற்காக, நடுவிலே அழகான கயிறு கட்டப்பட்ட, கடுமையான காவலுடன் கூடிய, உயரமான தூணை நிறுவினார்” என்பது இப்பாடலின் பொருள். “மழுவாள் நெடியோன்” என்ற சொற்றொடர் மூலம் திருமாலின் அவதாரமான பரசுராமர், மழுவையும் வாளையும் ஏந்தியிருக்கும் சிவபெருமானின் அம்சம் கொண்டவர் என்பதும் உணர்த்தப்படுகிறது.இவ்விதம் திருமாலை மட்டுமின்றி, அவரது பல்வேறு திருஅவதாரங்களையும் சங்க இலக்கியங்கள் புகழ்ந்துரைக்கின்றன. அடுத்ததாக, திருமாலின் தொப்புளில் இருந்து பிரும்மன் தோன்றிய புராணம் பற்றி சங்கத் தமிழ் என்ன சொல்கிறது என்பதைக் காண்போம்.
-தொடரும்