ஆபரேஷன் கோஜ்பீன்

தமிழகத்தின் கடல் பகுதியில் இருந்து பயணிக்கும் இரண்டு இந்திய மீன்பிடிப் படகுகள், அரபிக்கடலில், கேரள மாநிலம், கொச்சி கடல் பகுதியில் பெருமளவிலான போதைப் பொருட்களைப் பெறவுள்ளது என்று சில மாதங்களுக்கு முன் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், `கோஜ்பீன்’ எனப் பெயரிடப்பட்ட ஆபரேஷன் துவக்கப்பட்டது. வருவாய் உளவுத்துறை இயக்குநர் தலைமையில் கடலோரக் காவல் படை காவலர்கள் அரபிக்கடலில் 10 நாட்களுக்கும் மேலாக தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையில் சந்தேகத்துக்கு இடமாக வந்த பிரின்ஸ், லிட்டில் ஜீசஸ் என்ற இரண்டு மீன்பிடி விசைப்படகுகளை சுற்றிவளைத்து சோதனை நடத்தினர். அதில், மீன்களை பதப்படுத்தி வைக்கும் அண்டர்கிரவுண்ட் ஸ்டோரேஜ் பகுதியில் சாக்கு மூட்டைகளில் 218 கிலோ உயர்தர ஹெராயின் போதைப்பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 1,526 கோடி. போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட 20 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் 16 பேர் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள், 4 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இரண்டு மீன்பிடி படகுகளையும் கைப்பற்றி கொச்சி துறைமுகம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு விசாரணை துவக்கப்பட்டு உள்ளது.