விருது பெற்ற ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்

உணவு மற்றும் பொது விநியோகத் துறை 2020ம் ஆண்டுக்கான பிரதமரின் பொது நிர்வாக விருதினை பெற்றுள்ளது. குடிமைப் பணிகள் தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற பிரதமரின் பொது நிர்வாக விருது வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி இதனை வழங்கினார். புதிய கண்டுபிடிப்புகள் (பொது) மத்திய பிரிவின் கீழ் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த புதுமையான திட்டத்தின் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் குறிப்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நியாய விலைக்கடைகளில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தங்களுக்கான ரேஷன் பொருட்களை முழுமையாகவோ, பகுதியாகவோ, தடையின்றி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்களை மையப்படுத்திய அரசு திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த இத்திட்டம் உதவுகிறது. இதற்காக, தேசிய சுகாதார ஆணையம், மத்திய வீட்டு வசதி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை மற்றும் பிற துறைகளுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. 77 கோடி பேர் நாடு முழுவதும் இத்திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். கொரோனா காலத்தில் தேசம் முழுவதும் உள்ள 5 லட்சம் நியாய விலைக்கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம் நடந்தது. ரூ. 36 ஆயிரம் கோடி மதிப்பிலான 121 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு, ஆண்ட்ராய்டு செயலியும், 14445 என்ற இலவச உதவி எண்ணும் செயல்பாட்டில் உள்ளன.