நிகோபார் தீவுக்கு அங்கக வேளாண்மை சான்றிதழ்

இயற்கை எழில் சதிராடும் அந்தமான் – நிகோபார், சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாகத் திகழ்கிறது. எண்ணற்ற தீவுகளை உள்ளடக்கிய யூனியன் பிரதேசமாக அந்தமான் நிகோபார் உள்ளது. அண்மையில் மத்திய வேளாண், விவசாயிகள் நலவாழ்வு அமைச்சகம், நிகோபார் தீவு கூட்டத்துக்கு தேசிய அங்கக வேளாண்மைச் சான்றிதழை அளித்துள்ளது, குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மகத்தான நிகழ்வு. பாரம்பரியம் சார்ந்த பெரும் நிலப்பரப்புக்கு பாரதத்திலேயே இவ்வாறு சான்றிதழ் வழங்குவது இதுவே முதல்முறை.

சான்றிதழ் அளிக்கப்பட்டதன் வாயிலாக, இப்பகுதியில் விளையும் வேளாண் பொருள்கள் அங்ககப் பொருள்களுக்கான தேசியச் சந்தையில் நேரடியாக நுழைவது சாத்தியமாகியுள்ளது. நிகோபார் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த தொல்குடிகளின் பாரம்பரிய வெளாண்மையின் சிறப்பைப் பறைசாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ் அளிப்புக்குப் பின்னால், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும் நெடிய வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளன. 2015ம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிளான கருத்தரங்கில் மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலைய இயற்கை வளங்கள் மேலாண்மைத் துறையின் தலைவரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் வேல்முருகனும் அவரது குழுவைச் சேர்ந்தவர்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை அரங்கேற்றினர்.

ஆழமான ஆராய்ச்சிக்குப் பிறகு பழங்குடியினர் சார்ந்த எண்ணற்ற தகவல்களைத் திரட்டி ‘பழங்குடியினர் வேளாண்மையைப் புரிந்து கொள்ளுதல்’ என்ற சர்வதேச தரத்திலான புத்தகத்தை வேளியிட்டனர். இப்புத்தகம், நிகோபார் தீவுக் கூட்டத்தில் வாழ்ந்து வரும் பழங்குடியினரின் வேளாண்மைச் சிறப்பை வெளிச்சப்படுத்தியது. இயற்கை வேளாண்மையின் பயன்களை ஆணித்தரமான அறிவியல் சான்றுகளோடு உறுதிபட நிலைநாட்டியது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலங்களை பங்காளிகள் பிரித்துக்கொள்ளும் நடைமுறை காணப்படுகிறது. ஆனால் நிகோபார் தீவுக்கூட்டம் இதற்கு விதிவிலக்கு. இங்கு தனித்தனி சர்வே எண்களால் நிலம் பிரிக்கப்படவில்லை. நான்கைந்து தலைமுறை கடந்த பிறகும் பங்காளிகள் அனைவரும் கூட்டாக வேளாண்மை செய்கிறார்கள். விளைச்சலை குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களிடையே சண்டையோ சச்சரவோ கிடையாது.

தங்களுக்குத் தேவைப்படும் உணவுப் பகுதியை மட்டும் விவசாயிகள் எடுத்துக் கொள்கிறார்கள். தண்டு, இலை, தழைகள், உள்ளிட்டவற்றை விளைநிலத்திலேயே விட்டுவிடுகிறார்கள் இதனால் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் மண்ணில் குன்றுவதே இல்லை. ஒவ்வொரு தீவுமே பெரிய கலப்பு பண்ணையாக விளங்குகிறது. சான்றிதழ் கிடைத்துவிட்டதால் ஒவ்வொரு விவசாயியும் மூன்றாண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை. நிகோபார் தீவுக்கூட்டத்தில் விளையும் அனைத்துமே இயற்கை விளைபொருளாக இனி கருதப்படும். நிகோபார் தீவுக்கூட்டத்தை அடுத்து அந்தமான் தீவுக்கூட்டத்தையும் பூரண அங்கக வேளாண்மையின் கீழ் கொண்டுவர முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தமான் தீவுக்கூட்டத்துக்கும் எதிர்காலத்தில் தேசிய அங்க வேளாண்மைச் சான்றிதழ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.