ஜம்முவில் அர்த்தமுள்ள புத்தாண்டு காஷ்மீரில் அடுத்த ஆண்டு

மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட ஜம்மு- – காஷ்மீர் ஆட்சிப் பகுதியில் ஜம்மு மாநகரில் நவரேஹ் என்று ஒரு நிகழ்ச்சி. அது காஷ்மீரின் புத்தாண்டு பண்டிகையின் பெயர். நடத்திய அமைப்பு ’சஞ்சீவினி சாரதா கேந்திரம்’. ஏப்ரல் 12,13,14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. என்ன சிறப்பு இதற்கு? இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்ஸிடம் ஊக்கம் பெற்ற அன்பர்கள் நடத்திய இந்த விழாவில் 150 அமைப்புகள் தோள் கொடுத்து சிறப்பித்தன. சொந்த மண்ணிலேயே புலம்பெயர கட்டாயப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகளுக்குப் பின் காஷ்மீர் ஹிந்துக்கள் முதல் முறையாக பொருள் பொதிந்த விதத்தில் நவரேஹ் கொண்டாடினார்கள்.

ஏப்ரல் 12 தியாக தினம்
600 ஆண்டுகளுக்கு முன் பலிதானமான ஷிரியா பட் என்ற காஷ்மீரி பண்டிட் நினைவாக தியாக தினம். ஜெயினுலப்தீன் என்ற சுல்தானின் வியாதியை குணப்படுத்தியதற்காக ஷிரியா பட்டுக்கு ஏராளமாக பொன்னும் பொருளும் தர முன்வந்தான் சுல்தான். அதை ஏற்க மறுத்து அதற்கு பதிலாக ஹிந்துக்களின் உயிருக்கும் ஹிந்துக் கோயில்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் தரவேண்டுமென்று பேச்சுவார்த்தை நடத்த சுல்தானை அழைத்தவர் தியாக மூர்த்தி ஷிரியாபட்.

ஏப்ரல் 13 சங்கல்ப தினம்
காஷ்மீரின் புத்தாண்டு தினமான நவரேஹ் பண்டிகை நாள். அன்றைய தினம் உலகெங்கும் வாழும் காஷ்மீர் ஹிந்துக்கள் சபதம் ஏற்றார்கள். அது சங்கல்ப தினம்.

ஏப்ரல் 14 சௌரிய தினம்
காஷ்மீரில் 1,300 ஆண்டுகளுக்கு முன் வெற்றி வீரனாக கொடிகட்டிப் பறந்த மாமன்னன் லலிதாதித்ய முக்தபீடன் வீரத்தை போற்றும் வகையில் சௌரிய (வீர) தினம். மூன்று நாள் நவரேஹ் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பொதுச்செயலர் (சர்கார்யவாஹ்) தத்தாத்ரேய ஹொசபளே கருத்துரை வழங்கினார்.

ஆர்.எஸ்.எஸ் சர்கார்யவாஹ்
“காஷ்மீர் ஹிந்து சகோதர சகோதரிகளுக்கு நவரேஹ் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு தினத்தன்று காஷ்மீர் ஹிந்துக்கள் சபதம் ஏற்றார்கள், சங்கல்பம் செய்தார்கள். செய்கிற சங்கல்பம் தேசத்துக்காக / ஹிந்து தர்மத்திற்காக என்றால் அதன் சக்தி நூறு மடங்கு ஆகும். ஷிரியா பட் தன்னுடைய தியாகத்தால் சமர்ப்பணத்தால் சமுதாயத்திற்கு சேவை செய்தார் என்றால் மாமன்னன் லலிதாதித்யன் அன்னிய அரபு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ஹிந்து சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கு தன்னுடைய வீரத்தை சமர்ப்பித்தான்.

வரலாறு நெடுக மதவெறியர்களின் தாக்குதல்களில் எத்தனையோ பேர் காஷ்மீரில் பலியானார்கள். ஹிந்துவாக இருந்தது, காஷ்மீரில் வசித்தது இவை மட்டுமே அவர்கள் செய்த குற்றம்! இன்று சபதம் ஏற்றுள்ள காஷ்மீர் ஹிந்துக்கள் அந்த மேலோர்களைப் பின்பற்றி சமுதாயத்திற்காக பணிபுரிய உறுதி பூண வேண்டும். காஷ்மீர் ஹிந்துக்களைக் காப்பாற்று வதற்காகவே குரு தேக் பகதூர் பலிதானம் ஆனார். முன்பு பலமுறை காஷ்மீர் ஹிந்துக்கள் தங்கள் வீடு வாசலை விட்டு விரட்டியடிக்கப்பட்டதுண்டு. 1989 – 90ல் காஷ்மீர் ஹிந்துக்கள் புலம்பெயர கட்டாயப் படுத்தப்பட்டது ஏழாவது முறை. அதுவே கடைசி முறையாக அமையப்போகிறது.

அடுத்த நவரேஹ் புத்தாண்டை காஷ்மீரில் கொண்டாட வேண்டும் என்று காஷ்மீர் ஹிந்துக்கள் சபதமேற்றிருப்பது நிச்சயம் நிறை வேறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சொந்த மண்ணை மீட்க யூதர்கள் எத்தனையோ ஆண்டுகள் வீர விரதம் ஏற்றார்கள். அதுபோல, சீனாவிடம் பறி கொடுத்த திபெத் மண்ணை மீட்டே தீருவது என்ற உறுதியுடன் திபெத்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். காஷ்மீரி ஹிந்துக்களுக்கு ஊக்கமளிக்கும் வரலாறு இது. ஜம்மு- – காஷ்மீரில் மதவெறியர்களின் வன்முறையால் பாரத ராணுவத்தினர், துணை ராணுவப் படையினர், ஜம்மு – காஷ்மீர் காவல்துறையினர் ஏராளமானவர்கள் வீர மரணம் அடைந்திருக்கிறார்கள். அவர்களின் தியாகத்தையும் நாம் மறக்கக்கூடாது.

அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு, 35ஏ பிரிவு ஆகியவை செயலிழக்கச் செய்யப் பட்டது இந்தத் துணை மாநில மக்களின் வாழ்க்கையில் ஒரு மைல்கல். இந்தப் பகுதிக்கு தேவைப்படுகிற வளர்ச்சி திட்டங்கள் எத்தனையோ இப்போதுதான் தற்போதைய அரசால் செயல்படுத்தப்படுகின்றன; பாராட்டுகிறேன். “புலம்பெயரக் கட்டாயப்படுத்தப்பட்ட காஷ்மீர் ஹிந்துக்களை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்த முயற்சி நடக்கிறது; அது அந்த மக்களுக்கு மகிழ்ச்சி, கௌரவம். இந்தப் பணியில் நமது பாரதப் பிரதமர், பாரத உள்துறை அமைச்சர், பாரதிய ஜனதா கட்சி ஆகியோர் மிகப் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். நமது பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து நான் பெருமைப்படுகிறேன்”.
நன்றி : வி.எஸ்.கே. பாரத் தமிழில் பெரியசாமி