வாடிகனில் புதிய சட்டம்

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ பாதிரிகள் பலர், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, பெண்களை பலாத்காரம் செய்வது, அனாதை குழந்தைகளை விற்பனை செய்வது, பிளாக்மெயில், சொத்து குவிப்பு, அரசியல் தலையீடு, முறைகேடான பணபரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவது அவர்கள் மீதான மதிப்பை பொதுமக்களிடம் வெகுவாக குறைத்துவிட்டது. இந்த நிலையில், இத்தாலி, வாடிகன் நகரில் வசிக்கும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ், கார்டினல்கள், பாதிரிகள் உள்ளிட்டோர் குற்றச் செயல்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். குற்றம் புரிவோருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் வாடிகன் நகர சட்டங்களில் சீர்திருத்தங்கள் செய்து வருகிறார். அதன்படி, புதிய சட்டத்தை, போப் பிரான்சிஸ் அறிமுகப்படுத்தினார். இதன்படி, கிரிமினல் குற்றம் புரியும் கார்டினல்கள், பாதிரிகள் ஆகியோர் மீது, போப் அனுமதியின்படி, வாடிகன் நகர வழக்கறிஞர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தலாம். தற்போது, மூன்று கார்டினல்கள் தலைமையிலான, வாடிகன் கிரிமினல் குற்ற தீர்ப்பாயத்திற்கு மட்டுமே, இத்தகைய விசாரணையை மேற்கொள்ள அதிகாரம் உள்ளது. புதிய சட்டம் வாயிலாக இந்த அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இதனால், கார்டினல்கள் மற்றும் உலகெங்கும் உள்ள பாதிரியார்கள் மீதான கிரிமினல் குற்றங்களை வாடிகன் வழக்கறிஞர்கள் விசாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வாடிகனில் உள்ள கார்டினல்களின் சொத்து விபரங்களை அறிவிக்கும் சட்டத்தையும் போப் பிரான்சிஸ் பிறப்பித்ததுடன் 3,500 ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள பரிசுப் பொருட்களை கார்டினல்கள், பாதிரிகள் பெறுவதற்கு தடை விதிக்கும் சட்டத்தையும் அமல்படுத்தினார்.