வருமானவரித்துறை புதிய முயற்சி

‘வரி’ பற்றிய அறிவு, விழிப்புணர்வை மாணவர்களிடையே பரப்புவதற்காக உரை அடிப்படையிலான இலக்கியம், விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளைத் தவிர்த்து ‘விளையாட்டு வழிமுறைகளின் வாயிலாக கற்றல்’ என்ற புதிய அணுகுமுறையை மத்திய நேரடி வரிகள் வாரியம் பின்பற்றி வருகிறது. பொதுவாக, மிகவும் சவாலானதாகக் கருதப்படும் வழிமுறைகளுடன் சம்பந்தப்பட்ட கருத்துருக்களை விளையாட்டு, புதிர் மற்றும் நகைச்சுவை சித்திரங்களின் வாயிலாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தெரிவிப்பதற்கான பொருட்களை வாரியம் தயாரித்துள்ளது. கோவாவின் பனாஜியில் விடுதலையின் அமிர்த மகோத்சவ ஐகானிக் வார கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் நிதி மற்றும் வரி விழிப்புணர்வை பரப்பும் நோக்கத்தோடு மக்களைச் சென்றடையும் பொருட்களை அறிமுகப்படுத்தி, இந்த முன்முயற்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். அடுத்த 25 ஆண்டுகளை அமிர்த காலம் என்று குறிப்பிட்ட அமைச்சர், புதிய பாரதத்தை வடிவமைப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இது போன்ற விளையாட்டுப் பொருட்களை அவர் வழங்கினார். பாரதம் முழுவதும் உள்ள வருமான வரி அலுவலக இணைப்பின் மூலம் இந்தப் பொருட்கள் பள்ளிகளுக்கு முதலில் விநியோகிக்கப்படும். இவற்றை புத்தகக் கடைகள் வாயிலாக விநியோகம் செய்வதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.