நேவிக் செயலி தொகுதி

வழிகாணும் சேவைகள் வழங்குவதற்கென இஸ்ரோ உருவாக்கியுள்ள ‘நேவிக்’ செயலியில் இணைப்பதற்கான தொகுதிகளை பாரதம் உருவாக்கி தயாரிக்கவுள்ளது. இது பாரதத்திலும், சுற்றியுள்ள 1,500 கி.மீ பகுதிக்கும் நேவிகேசன் எனப்படும் வழிகாணுதவியை வழங்கும். இந்த தொழில்நுட்பம் ஜி.பி.எஸ் என்கிற புவியில் இடம் காணும் அடையாள முறைக்கு அவசியமாகும். மின்னணு அமைப்புகள் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் பிரதமரின் தொலைநோக்குக்கு ஏற்ப, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் சட்டபூர்வ அமைப்பான தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் இந்த தொழில்நுட்பத்துக்கு நிதி உதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சீரா டிஜிடல் சிஸ்டம்ஸ் எனும் தனியார் நிறுவனம் இதனைத் தயாரிக்கவுள்ளது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பாரதத்தின் தொழில்நுட்ப ஆளுமையை உருவாக்கவும், பொருளாதார தன்னிறைவு பெறவும் இது உதவிடும்.