சுதந்திரப் போராட்ட வீரர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினம்

முத்துலட்சுமி ரெட்டி தேசபக்தரும் சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய நாட்டிற்கு பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற்றுத்தர பாடுபட்ட வெகு சில பெண்மணிகளில் முக்கியமானவர். இவர் ஒரு பெண் புரட்சியாளர் மட்டும் என்றில்லாமல் ஒரு சமூக சீர்திருத்தவாதியும் ஆவார்.

முதல் பெண் சாதனையாளர் என்று இவரை பலவற்றில் பட்டியலிடலாம். ஆண்கள் கல்லூரியில் சேர்ந்து படித்த முதல் பெண் , அரசாங்க பேறு மற்றும் கண் மருத்துவமனையின் பயிற்சி முதல்வராக பயிற்சி பெற்ற முதல் பெண் ,பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர், மாநில சமூக நல ஆலோசனை குழுவின் முதல் பெண் தலைவர், முதல் பெண் சட்டமன்ற துணைத் தலைவர் ,மதராஸ் கார்ப்பரேஷனில் மேயருக்கு அடுத்த பதிவில் அமர்ந்த முதல் பெண் போன்ற பல சாதனைகள் புரிந்தவர்.
தவிர 1956 ஆம் ஆண்டு ஜனாதிபதி இடம் இருந்து பத்மபூஷன் விருது பெற்றவர். இவர் சமுதாயத்திற்கு கொடுத்த இரண்டு அற்புத வரங்கள் குழந்தைகளுக்கு என இவரால் திறக்கப்பட்ட ஔவை இல்லம் மற்றும் புற்றுநோய் மருத்துவமனை.
இவர் ஆண்கள் படிக்கும் கல்லூரி ஒன்றில் முதல் பெண் மாணவியாக சேர்ந்தார் .பல மணி நேரங்கள் ஆண் மாணவர்களுக்கு நடுவே தனி பெண்ணாக அமர்ந்து படிப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டார் .ஆனால் அதற்கு அசராமல் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.
முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணராக வெற்றிவாகை சூடினார். இவரின் வாழ்க்கையில் மிக பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் இருவர் .ஒன்று மகாத்மா காந்தி மற்றொருவர் டாக்டர் அன்னி பெசன்ட்.இவர்கள் கேட்டுக் கொண்டபடி தன்னை பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு என முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டார் .பெண்கள் நான்கு சுவர்களினுள் அடைப்பட்டுக் கிடந்த அந்த காலகட்டத்தில் அவர்களின் முன்னேற்றத்திற்காக இவர் வெளியில் வந்து பாடுபட்டார்.
தன் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றவரிடம் இந்திய பெண்களின் சங்கம் கேட்டுக்கொண்டபடி மருத்துவராக வருமானம் பெற்று தரும் மருத்துவ பயிற்சியை விட்டுவிட்டு மதராஸ் சட்டமன்ற தொகுதியின் அங்கத்தினரானார். அதன் துணைத்தலைவராக எதிர்ப்பு ஏதும் சந்திக்காமல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நகராட்சி மட்டும் சட்டமன்றங்களில், பெண்களுக்கான உரிமையை பெற்று தருவதற்காக போராட்டங்கள் நடத்தினார் .அனாதை பெண் குழந்தைகளிடம் தனி கவனம் செலுத்தினார். அவர்கள் தங்கி அன்றாட வாழ்க்கை நடத்துவதற்காக ஔவை இல்லம் ஒன்றை மதராசில் அமைத்தார். இன்றும் அந்த இல்லம் அனாதை பெண் குழந்தைகளுக்கு படிப்பும் சுய தொழில் பயிற்சியும் அளித்து கொண்டிருக்கிறது.
முத்துலட்சுமி பல சமுதாய சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். அவரின் சட்டமன்ற அனுபவங்களை புத்தகமாக தொகுத்து “மை எக்ஸ்பீரியன்ஸ் அஸ் எ லெஜிஸ்லேடர்” என்று வெளியிட்டார். பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான தனி மருத்துவமனை ஆரம்பிப்பதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். அன்றைய அரசாங்கம் அவர் கருத்தை ஏற்று அப்போதிருந்த மகப்பேறு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தனிப்பகுதி ஒன்றைத் திறந்தது. முனிசிபல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்திக் கொண்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்வதற்கும் பரிந்துரைத்தார்.இவரின் முயற்சியின் கீழ் தான் திருவல்லிக்கேணி பகுதியில் கஸ்தூரிபாய் மருத்துவமனை தொடங்கப்பட்டது.
முத்துலட்சுமி அகில இந்திய மகளிர் மாநாட்டின் தலைமை பொறுப்பை வகித்தார். அப்பொழுது அவர் விபச்சார விடுதிகளை மூடவும் பெண்கள் மற்றும் குழந்தைகளை தவறான நோக்குடன் கடத்தப்படுவதை தடுக்கவும் மசோதா ஒன்றியம் வெளியிட்டார். இத்தகைய பெண்களுக்கு பாதுகாப்பு அளித்திட தனியாக ஒரு புகலிடமும் ஏற்படுத்தப்பட்டது. இவரின் முயற்சியால் முஸ்லிம் பெண்களுக்கான தனித்தங்கும் விடுதியும் அரிஜனப் பெண்கள் படிப்பதற்கான உதவித்தொகை வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. அரசாங்கத்திற்கு ஆணின் திருமண வயதை 21 ஆகவும் பெண்களின் திருமண வயதை 16 ஆகவும் உயர்த்தும்படி பரிந்துரைத்தார்.
அவரது உறவினர் ஒருவர் கான்சர் நோயால் இறக்க, அந்த நோயைப் பற்றி அறிந்து கொள்ளும்‌ ஆர்வத்தில் மேல் படிப்பு படிப்பதற்கு ஐக்கிய நாட்டில் இருக்கும் ராயல் கேன்சர் இன்ஸ்டியூட்டில் சேர்ந்தார். பின் அடையாறில் உள்ள கான்சர் மருத்துவமனையை நிறுவினார்.
1952 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு வால் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.ஜூன் 18 1954 அன்று மருத்துவமனை செயல்பட தொடங்கியது .இப்பொழுது இந்த மருத்துவமனை சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு ஒரு அனைத்திந்திய நிறுவனமாக இந்திய நாட்டிலும் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. முத்துலட்சுமி மாநில சமூக நல வாரியத்தின் முதல் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அவரால் கல்வி குழுவிற்கு இந்தியாவில் உள்ள கல்வி முன்னேற்ற நிலையை பற்றி கட்டுரை ஒன்றும் எழுதப்பட்டது. இது ஒரு சாதனையாக பார்க்கப்பட்டது.
பின் இந்த ஹர்டாக் கல்வி குழுவின் அங்கத்தினராக இவர் பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ள கல்வி முன்னேற்றங்களை கண்டறிந்தார். அந்த குழுவிலும் ஒரே பெண்ணாக இருந்து கொண்டு பல மாற்றங்களை கொண்டு வந்தார். அகில இந்திய மகளிர் குழுவின் சார்பாக வெளிவந்து கொண்டிருந்த ரோஷிணி எனும் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்தார்.
 அவரது கடைசி காலத்தில் கண்பார்வையை இழந்தாலும் தன் முடிவுகள் பற்றிய தெளிவு உடன் நினைத்ததை நடத்தி முடித்தார். பெண்களுக்கான அநீதி உலகின் எந்த கோடையில் நடந்தாலும் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் துடித்து எழுவார். இது 1966 ஆம் ஆண்டு அவர் தனது கடைசி மூச்சை விடும் வரையில் தொடர்ந்தது. டாக்டர் முத்துலட்சுமியின் தன்னலமில்லா சேவையின் அங்கீகாரமாக 1947 இல் செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசிய கொடியில் அவரது பெயர் பொறிக்கப்பட்டது. 1985இல் அவரது திருவுருவச் சிலையை திறந்து வைத்த போது அப்போதைய துணை ஜனாதிபதி ஆர் வெங்கட்ராமன் கூறியதை இங்கே நினைவு கூறுகிறேன் “முத்துலட்சுமி ரெட்டி இந்திய பெண்களுக்காக சாதித்தவற்றை காலத்தை வென்ற செயல் என்றே பாராட்ட வேண்டும். பல தலைமுறைகள் தேவைப்படக்கூடிய சாதனைகள் ,செயல்களை அவர் தனது வாழ்நாளில் நிகழ்த்திக் காட்டினார்.”
 பசி நோக்கார், கண் துஞ்சார், அவமதிப்பு கொள்ளார், கருமமே கண்ணாயினார் என்பதற்கு ஏற்ப அவரது வாழ்க்கை அமைந்தது.
–செல்வி.அனுகிரஹா