ஹிந்துவாக மாறிய முஸ்லீம் பெண்

உ.பி., மாநிலம் பரேலியைச் சேர்ந்த லுப்னா ஷாசீன் என்ற 21 வயது முஸ்லீம் பெண்ணும் அவரது வீட்டின் அருகாமையில் வசிக்கும் பாபி காஷ்யப் என்ற ஹிந்துவும் இரண்டு வருடங்களாக காதலித்தனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இருப்பினும், மணமகன் குடும்பத்தினர், சங்கதார் என்ற ஒரு பூஜாரி மூலம் பெண்ணின் குடும்பத்தினரிடம் பேசி ஒப்புக்கொள்ள வைத்தனர். இதையடுத்து மே 20ம் தேதி அந்த பெண் தங்களது தாய்மதமான ஹிந்து மதத்திற்கு மாறி, தனது பெயரை அரோஹி என மாற்றிக் கொண்டு பாபியை திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த பெண், தனது உறவினர்கள் மற்றும் பல முஸ்லிம் தலைவர்களிடம் இருந்து தங்களுக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக தெரிவித்துள்ளார். இவர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த பூஜாரிக்கு கூட அச்சுறுத்தல்கள் வருகிறது. இதையடுத்து மணமகன் குடும்பத்தினர், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு காவல் நிலையத்தையும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். தம்பதியினர் தற்போது பரேலியில் இல்லை, அவர்கள் திரும்பியதும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பேசிய ஆரோஹி, ‘முஸ்லீம் சமூகப் பெண்களுக்கு இழைக்கப்படும் அட்டூழியங்கள் குறித்து கவலைப்படுகிறேன். ஹிஜாப், முத்தலாக் மற்றும் நிக்காஹ் ஹலாலா போன்ற அடக்குமுறை விஷயங்கள் வருத்தம் அளிக்கிறது. பாபியை சந்தித்து, காதலித்து, திருமணம் செய்து கொண்டதும் எனது வாழ்க்கையே மாறிவிட்டது’ என்று கூறியுள்ளார்.