ஹிந்து கோயிலில் முஸ்லிம் கடைகள்

குஜராத்தின் நவ்சாரியில் உள்ள பிலிமோரா நகரில் உள்ள சோம்நாத் மகாதேவ் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறுகிறது, அந்த காலகட்டத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். இதனை முன்னிட்டு கோயிலில் அமைக்கப்படும் தற்காலிக கடைகள், கண்காட்சிகள், மற்றும் குழந்தைகள் விளையாடும் பகுதி ஆகியவற்றைக் கட்டுவதற்காக மும்பையைச் சேர்ந்த அன்வர் ஷேக் என்ற முஸ்லிம் நபருக்கு கோயில் நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இது அங்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அப்பகுதி விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஹிரேன் ஷா, “முஸ்லீம் ஒருவருக்கு ஹிந்து கோயிலின் ஒப்பந்தத்தை வழங்குவது, திருவிழாவிற்கு வரும் லட்சக்கணக்கான ஹிந்து பக்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் அதனை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம். கோயில் வளாகத்தில் முஸ்லிம் நபர்கள் நமாஸ் செய்யலாம், இறைச்சியை உண்ணலாம். இது போன்ற செயல்பாடுகள் ஹிந்து பக்தர்களை புண்படுத்தும்” என கூறினார். வி.ஹெச்.பி அமைப்பினர் இதுகுறித்து கோயில் நிர்வாகத்தை எச்சரித்தனர். வி.ஹெச்.பி எழுப்பிய ஆட்சேபணைக்குப் பிறகு, கோயில் அறக்கட்டளையுடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டு, பிரச்சினை தீர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோயில் அறங்காவலர் சிவ படேல், ‘கோயில் நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இதற்கு தீர்வு காணப்பட்டது. ஏற்கனவே கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டுவிட்டன. அதனால், தற்போது டெண்டரை ரத்து செய்ய முடியாது. ஆனால் கோயில் வளாகத்திற்குள் இறைச்சியை சாப்பிட மாட்டோம் தங்கள் மத வழிபாட்டை கோயில் வளாகத்தில்செய்ய மாட்டோம் என ஒப்பந்ததாரரிடம் உத்தரவாதம் பெறப்படும். அடுத்த வருட ஒப்பந்தத்தின்போது புதிய டெண்டர் நடைமுறைகளை குறித்து யோசிப்போம். வி.ஹெச்.பி முன் நாங்கள் எங்கள் பிரச்சினைகளை முன்வைத்தோம், அவர்களும் ஒப்புக்கொண்டனர்’ என தெரிவித்தார். . இதுகுறித்து பேசிய வி.ஹெச்,பி குழுவினர்,எங்கள் குழு இக்கண்காட்சியில் விழிப்புடன் இருக்கும். ஏதேனும் ஆட்சேபனைக்குரிய விஷயங்கள் நடந்தால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.