தாய்மொழி கல்வி அவசியம்

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து ஓராண்டு முடிவடைவதையொட்டி பிரதமர் மோடி மாணவர்களுடன் வீடியோ கான்பரன்ஸிங் வழியாக கலந்துரையாடினார். அப்போது அவர், ‘லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னாட்சி பெற்ற கல்வி அமைப்புகள் ஆகியோரின் ஆலோசனைகளை பெற்று கல்வி கொள்கை படிப்படியாக அமல்படுத்தப்படுகிறது. புதிய கல்வி கொள்கை மிகப்பெரிய தொலைநோக்கு திட்டம். நாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் கல்வி தான், நம் நாட்டின் எதிர்காலம். இளைஞர்கள் தங்களுக்கு பிடித்தமான கல்வியை தேர்வு செய்யும் வகையில் புதிய கொள்கை அமைக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு தேர்வு மீதான பயத்தில் இருந்து விடுதலை அளிக்கிறது. நாட்டில் பொறியியல் கல்வி பாடங்களை, 11 மொழிகளில் மொழிமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கற்பித்தல் ஊடகமாக தாய்மொழி இருப்பது ஏழை, கிராமப்புற, பழங்குடியின மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். இதனை முன்னிட்டு எட்டு மாநிலங்களில், 14 பொறியியல் கல்லுாரிகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, வங்க மொழிகளில் கல்வி கற்பிக்கப்பட உள்ளது. 3 லட்சத்துக்கும் அதிகமான மாற்று திறனாளி மாணவர்களுக்காக சைகை வழி கல்வி தேசிய கல்வி கொள்கையில் ஒரு தனிப்பாடமாகவே சேர்க்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.