மக்கள் மனதில் மொல்ல ராமாயணம்

வால்மீகி முனிவர் படைத்த சமஸ்கிருத ராமாயணத்தைப் பின்பற்றி சுத்தத் தெலுங்கில் ‘கொம்மரி மொல்ல’ (1440 – 1530 காலத்தைச் சேர்ந்த பெண் கவிஞர்) எழுதிய காவியம் ‘மொல்ல ராமாயணம்’. இதில் ‘கந்த பத்யம்’ என்னும் செய்யுள் வகை அதிகமாக காணப்படுவதால், இதனைக் ‘கந்த பத்ய ராமாயணம்’ எனவும் அழைப்பர்.
மொல்ல ராமாயணம் ஆறு காண்டங்கள், சுமார் 870 செய்யுள் கொண்டது. இதில் வசனங்களும் அடக்கம். ‘மொல்ல ராமாயணம்’ தெலுங்கில் எழுதப்பட்ட ராமாயணங்களிலேயே மிக எளிமையான மொழிநடையில் அமைந்த ராமாயணமாகத் திகழ்கிறது. மொல்லவின் எழுத்துநடை சரளமானது, ரமணீயமானது.

முக்கியமாக, மக்கள் நடைமுறைப் பேச்சு வழக்கில் பயன்படுத்திய சொற்களாலேயே ராமாயணத்தை எழுதியுள்ளார் மொல்ல. ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால், அவருக்குமுன் கவி இயற்றிய ‘போத்தனா’ போன்ற தெலுங்குப் புலவர்கள் தெலுங்கோடு சமஸ்கிருதத்தை மிக அதிகமாக சேர்த்துள்ளார்கள்.

இவருடைய நூலில் காணப்படும் சமத்காரம், திறமை, புலமை, சொற்களைக் கையாளும் லாகவம், தனக்கு முந்தைய கவிஞர்களின் நூல்களின் மொழி பற்றி அவர் கூறும் வியாக்யானங்கள் ஆகியவற்றை எல்லாம் பார்க்கையில், இவர் விஸ்தாரமான காவியங்கள், பிரபந்தங்கள் படித்திருக்க வேண்டுமெனத் தெரிகிறது. முதல் செய்யுளில் கூறுகிறார்: “ராமாயணம் பலமுறை பலரால் இயற்றப்பட்டுள்ளது. முன்பே உணவு சாப்பிட்டுவிட்டோம் என்பதற்காக யாராவது சாப்பிடுவதை நிறுத்துவார்களா? அதேபோல் ராமாயணமும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம், படிக்கலாம், விரும்பி அனுபவிக்கலாம். நூல் வாசிப்பவர் உடனடியாகப் புரிந்துகொள்ள இயலாத சொற்களைக் கொண்டிருந்தால் அது காது கேளாதவரும் வாய் பேசாதவரும் நடத்தும் உரையாடலைப்போல் இருக்கும்” என்றும் ஹாஸ்யமாக கண்டித்துள்ளார். மேலும், “கவிதை, செய்யுள் என்பது நிகண்டுவைத் தேடியோ அறிஞர்களைத் தேடியோ போகவேண்டிய தேவை இல்லாமல், படிக்கும்போதே பொருள் விளங்க வேண்டும்” என அழுத்திக் கூறுகிறார்.

மூன்று அத்தியாயங்களில் இவர் விவரிக்கும் யுத்த காண்ட வர்ணனைகளைப் பார்க்கையில் இவர், தானே நேரில் போர் செய்திருக்க வேண்டும் அல்லது யுத்தம் தொடர்பான நூல்களையாவது ஆழ்ந்து படித்திருக்க வேண்டும் என்று தோன்றும் வகையில் அமைத்துள்ளன. சொற்களை சிக்கனமாகப் பயன்படுத்துவதில் மொல்ல வல்லவர். வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணத்தில் இல்லாத சில நிகழ்ச்சிகளைக்கூட வேறு ராமாயணங்களிலிருந்து எடுத்து சேர்த்துள்ளார் மொல்ல. உதாரணத்திற்கு அயோத்யா காண்டத்தில் ராமர் சுவர்ணா நதியைத் தாண்டும்முன் குகன் அவர் பாதங்களைக் கழுவும் இடம். அதை அத்யாத்ம ராமாயணத்திலிருந்து எடுத்திருக்கலாம் எனக்
கூறப்படுகிறது. இதன்மூலம் மொல்ல விரிவாகத் தெலுங்கு, சமஸ்கிருத நூல்களைப்படித்தறிந்துள்ளது தெரிய வருகிறது. அவருக்குமுன் புகழ்பெற்றுத் திகழ்ந்த ‘திக்கனா’ போன்ற தெலுங்குப் புலவர்கள் சமஸ்கிருதத்திலிருந்து சிறிதும் பிறழாத தெலுங்கு மொழிபெயர்ப்புகளை அளித்துள்ளனர். விஜய நகர சாம்ராஜ்ய அரசர் ஸ்ரீகிருஷ்ண தேவராயர் காலத்தைச் சேர்ந்த ஸ்ரீநாதர் போன்ற புலவர்கள், கற்பனைக் கதைகளை சேர்க்கக்கூடிய கவி வகையைச் சேர்ந்த பிரபந்தங்களைப் பாடியுள்ளனர்.

இவரது முழுப்பெயர் ‘ஆதுகூரி மொல்ல’. ஆந்திராவின் கடப்பா மாவட்டத்திலுள்ள ‘கோபவரம்’ என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் குயவர் குலத்தில் தோன்றியவராகக் குறிப்பிடப்படுவதால் ‘கொம்மரி மொல்ல’ என்று அழைக்கப்பட்டாலும், அதற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. புராதனப் பெண் கவிஞர்களுள் மொல்லவைப்போல் இந்த அளவு புகழ் பெற்றிருக்கும் பெண்கள் வேறெவரும் இல்லை. தான் எழுதிய ராமாயணத்தின் முன்னுரையில் முதல் சில செய்யுட்களில் தன் பெயரை ‘மொல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘மல்லி’ என்னும் பெயர் அழைப்புப் பெயராக ‘மொல்ல’ என மருவி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களிடையே ஒரு கருத்து நிலவுகிறது. தன் தந்தையின் பெயர் ‘கேசவ செட்டி’ என்றும், அவர் சிறந்த சிவ பக்தர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவர் பிரம்மச்சாரிணியாகக் கருதப்படுகிறார். தான் முறையாக எத்தகைய கல்வியும் கற்கவில்லை என்றும் தன்னுடைய இயல்பான புலமைக்கு இறைவனின் அருளே காரணம் என்றும் கூறியுள்ளார். தான் எழுதிய ராமாயணத்தை எந்த அரசருக்கும் அர்ப்பணம் செய்யவில்லை. செல்வமோ புகழோ தேடவில்லை. இது அவருடைய ராம பக்திக்கு எடுத்துக்காட்டு. இவருக்குமுன் பல ஆண் கவிஞர்கள் எழுதிய ராமாயணங்கள் பல இருந்த போதிலும், மொல்ல ராமாயணம் மட்டுமே காலகர்ப்பத்தில் கலையாமல் நிலைத்து நின்றிருப்பது இவருடைய புலமைக்கும் திறமைக்கும் பக்திக்கும் எடுத்துக்காட்டு எனக் கூறவேண்டும்.

விருதுகளும் கௌரவங்களும்
ஆந்திர அரசாங்கம் மொல்லவின் சிலையை ஹைதராபாத் உசைன் ஸாகர் ஏரியின் மேலுள்ள ‘டாங் பண்ட்’ பாலத்தின் கரைகளில், தெலுங்கு மொழியின் இதர உயர்ந்த ஆளுமைகளின் சிலைகளின் நடுவே அமைத்துக் கௌரவித்துள்ளது. இண்டூரி வெங்கடேஸ்வர ராவ் மொல்லவின் வாழ்க்கை வரலாற்றைப் புனைவு கலந்த கதையாக ‘கும்மரி மொல்ல’ (குயவர் மொல்ல) என்ற பெயரில் எழுதி 1969ல் வெளியிட்டார். இந்த நாவலை ஆதாரமாகக் கொண்டு சங்கர சத்தியநாராயணா என்ற கவிஞர் கதைப் பாடல் வடிவில் Ballad இயற்றியுள்ளார். இது ஆந்திரப்பிரதேசில் மிகப்பிரபலமாக உளது. இதே நாவலை வைத்து ‘கதாநாயகி மொல்ல’ என்ற திரைப்படம் வெளிவந்தது. வாணிஸ்ரீ இதில் மொல்லவாக நடித்துள்ளார்.
கட்டுரையாளர்: ஹைதராபாத்தில் வசிக்கும் பிரபல எழுத்தாளர்