மிஷன் ககன்யான்

மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் பாரதத்தின் முதல் திட்டமான ‘மிஷன் ககன்யான்’ 2018 சுதந்திர தினத்தில் அறிவிக்கப்பட்டது. கொரோனா போன்ற பிரச்சனைகளால் தள்ளிப்போன இந்த திட்டம் தற்போது, தேசம் சுதந்திரமடைந்ததன் 75 ஆவது ஆண்டு நிறைவையொட்டி செயல்படுத்தப்பட உள்ளது. ககன்யான் திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு இந்திய விமானப்படை வீரர்கள், மாஸ்கோவிற்கு அருகிலுள்ள ஜியோஜனி நகரில் உள்ள ரஷ்ய விண்வெளி பயிற்சி மையத்தில் மிகக்கடினமான பயிற்சியை பெற்று வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்த ‘ககன்யான் திட்டம்’ முழுக்க முழுக்க நமது உள்நாட்டுத் தயாரிப்பு என்பது தேசத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம். இந்த ககன்யான் பயணத்தில், இஸ்ரோ பூமியிலிருந்து 400 கி.மீ தூரத்தில் மூன்று வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும். அவர்கள் ஏழு நாட்கள் விண்வெளியில் தங்கி பூமியின் சுற்று வட்டப்பாதையில் பயணிப்பார்கள்.