காணாமல் போகும் காங்கிரஸ்

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல ஒரு காலத்தில் தன்னை எதிர்க்க ஆளின்றி ஒட்டுமொத்த பாரதத்தையும் ஆட்சி செய்தது காங்கிரஸ். ஆனால், குடும்ப அரசியல், ஊழல், பேராசை, ஹிந்து வெறுப்பு, தெளிவற்ற தலைமை என பல காரணங்களால் ஒவ்வொரு மாநிலமாக காணாமல் போகிறது. இதனை சமீபத்தில்கூட பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், அக்கட்சி தற்போது மேகாலயாவில் காணாமல் போகும் நிலையை அடைந்துள்ளது. மேகாலயாவில் 2018 தேர்தலில் 19 இடங்களை வென்றது காங்கிரஸ். நவம்பர் 2021ல், முன்னாள் முதல்வர் டாக்டர் முகுல் சங்மா மற்றும் 11 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், திருணமூல் காங்கிரசில் இணைந்தனர். இதனையடுத்து மேகாலயாவில் காங்கிரஸ் சிதைய ஆரம்பித்தது. இடைத்தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் கட்சியிடம் இரண்டு இடங்களை இழந்தது. தற்போது, மேகாலயா காங்கிரஸ் கட்சித் தலைவர் அம்பரீன் லிங்டோ தலைமையில் நான்கு எம்.எல்.ஏக்கள் முதல்வர் கான்ராட் சங்மாவை சந்தித்து ஆளும் கூட்டணியில் இணைவதாகக்கூறி ஆதரவு கடிதத்தை அளித்தனர். இந்த எம்.எல்.ஏக்கள் என்.பி.பி’யில் இணைவார்களா அல்லது பா.ஜ.கவில் இணைவார்களா என்பது தெளிவாகவில்லை. ஆனால் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் இந்த நடவடிக்கை மேகாலயாவில் காங்கிரசுக்கு முடிவுரை எழுதியுள்ளது என்பது நிதர்சனம்.