ராஜ்யசபா எம்.பி.,யாக அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் வேட்பு மனு

வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள ஜெய்சங்கர் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக நேற்று அவர் காந்தி நகரில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.குஜராத்திலிருந்து தேர்வான மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு தேர்வு பெற்ற 10 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவி காலம் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நிறைவடைகிறது. இப்பதவிக்கு வரும் ஜூலை 24-ம் தேதி தேர்தல் நடக்கிறது. குஜராத் சட்டசபையில் போதுமான பலம் இல்லாத காரணத்தால் இந்த 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கு போட்டியிடப் போவது இல்லை என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத் மாநிலம் ஆமதாபாத் வருகை தந்தார். அவரை பாஜக தலைவர்கள், மாநில அமைச்சர்கள் வரவேற்றனர். இதையடுத்து, குஜராத் மாநில ராஜ்யசபா எம்பியாக மீண்டும் ஜெய்சங்கர் நேற்று காந்தி நகரில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.