கனடாவில் தொடரும் படுகொலைகள்

கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் சன்ராஜ் சிங் என்ற சீக்கிய இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் இறந்து கிடந்தார்.தகவலறிந்து அங்கு சென்ற கனடா காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.இது கொலை சம்பவம் தான் என காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.கடந்த சில மாதங்களாக பாரத வம்சாவளியினர், குறிப்பாக சீக்கியர்கள் கனடாவில் கொலை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சன்ராஜ் சிங் கொலையுடன் சேர்த்து கடந்த 2 மாதங்களில் 2 பெண்கள் 2 ஆண்கள் என 4 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நவம்பர் 24 அன்று, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 18 வயதான சீக்கிய பெண் மெஹக்ப்ரீத் சேத்தி, உயர்நிலைப் பள்ளி வாகன நிறுத்துமிடத்தில் ஒரு இளைஞனால் குத்திக் கொல்லப்பட்டார். டிசம்பர் 3ம் தேதி இரவு, மிசிசாகாவில் உள்ள பெட்ரோ கனடா எரிவாயு நிலையத்திற்கு வெளியே ப்ராம்ப்டனில் வசிக்கும் பவன்ப்ரீத் கௌர் பலமுறை சுட்டுக் கொல்லப்பட்டார்.டிசம்பர் 10ம் தேதி, 40 வயதான ஹர்பிரீத் கௌர் கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் உள்ள தனது வீட்டில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு இறந்தார். இந்த சம்பவங்களைத் தவிர, 28 வயதான சத்விந்தர் சிங் கடந்த செப்டம்பர் 12 அன்று ஒன்ராறியோவில் சில சமூக விரோதிகளால் துப்பாக்கிச் சுடப்பட்டு காயமடைந்தார், பின்னர் அவர் அவர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். பிராம்ப்டனில் உள்ள பஞ்சாபி வானொலி தொகுப்பாளர் ஜோதி சிங் மான், ஆகஸ்ட் மாதம் மூன்று நபர்களால் தாக்கப்பட்டார்.ஜூலை மாதம், கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் ரிபுதாமன் சிங் மாலிக் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரேயில் சுட்டுக் கொல்லப்பட்டார்.மார்ச் மாதம், கபுர்தலாவைச் சேர்ந்த ஹர்மன்தீப் கவுர் என்ற 25 வயது பெண், கனடா நாட்டவரால் தாக்கப்பட்டு இறந்தார்.பிப்ரவரியில், கிரேட்டர் டொராண்டோ பகுதியில் ஊடகவியலாளர் தீபக் பஞ்ச் மூன்று நபர்களால் தாக்கப்பட்டார். கனடாவில் அதிகரித்து வரும் இன வெறுப்பு குற்றங்கள், மதவெறி வன்முறைகள் மற்றும் பாரத வம்சாவளியினருக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றின் அதிகரிப்பு குறித்து மத்திய அரசு கனடா அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதன் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.மேலும், வட அமெரிக்க தேசத்தில் உள்ள தனது குடிமக்களையும் அங்கு படிக்க செல்லும் மாணவர்களையும் விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்துள்ளது.