மராட்டிய சிங்கம் தாந்தியா தோபே

தாந்தியா தோபே, பாரத விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து ஜான்சி ராணி லட்சுமி பாய்க்கு பெரிதும் உதவியவர். இவரது இயற்பெயர் இராமசந்திர பாண்டுரங்கா. இரண்டாம் பாஜிராவின் குடும்பத்தைச் சேர்ந்தவரின் மகன். பித்தூர் நாட்டின் நானா சாகிப்பின் நெருங்கிய நண்பர். சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர். முறையான இராணுவப் பயிற்சி இல்லாவிடிலும் கொரில்லாப் போர் முறையில் போரிட்டு, எந்த நெருக்கடியையும் சமாளித்துத் தப்பிவிடக்கூடியவர். 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தை மத்திய பாரதப் பகுதிகளில் மிகச் சிறப்பாக செயல்படுத்தி ஆங்கிலேயரை கலங்கடித்தவர். ஆங்கிலேயரால் சிறைபிடிக்கப்பட்ட இவர் தூக்கில் இடப்பட்டார்.

தாந்தியா தோபேயின் குடும்பத்தார், இன்று உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள், தம் முன்னோர் தாந்தியா பற்றிய உண்மையை வெளியிடும் முயற்சியில் ஒன்றிணைந்து செயல்பட்டு, வெற்றியும் கண்டுள்ளனர்.தாந்தியா தோபே குடும்பத்தைச் சேர்ந்த பரக் தோபே, “ஆபரேஷன் ரெட் லோட்டஸ்’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில், “தாந்தியா பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்படவில்லை; 1859ல் நடந்த சண்டையில் கொல்லப்பட்டார், அதை நேரில் பார்த்த சாட்சியும் உண்டு’ என்று ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்.

இது குறித்து பரக் தோபே கூறுகையில், ‘பிரிட்டிஷாரின் வரலாறு எழுதும் முறையைப் பின்பற்றி, கொடுங்கோலன், ஜமீன்தார், முதியவர், நயவஞ்சகமானவர், வீணானவர், எரிச்சல் ஊட்டுபவர், இழிவானவர், மோசமான மனநிலை கொண்டவர் என்றெல்லாம் நம் பாரதத் தலைவர்களைப் பற்றியும் பாரத வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர்.

இந்தப் புரட்சி, காரல் மார்க்சின் கம்யூனிசக் கொள்கைக்கேற்ப, மக்கள் புரட்சியாகவும், மதக் கலவரமாகவும் திரிக்கப்பட்டுள்ளது. 1857 புரட்சி பற்றி நம் பள்ளிகளில் உள்ள வரலாறு ஒரு மோசமான முன்னுதாரணம். தாந்தியா தோபே ஒரு நாயகனாகக் காட்டப்பட்டாலும், அவரது வரலாறு அதற்குரிய சான்றுகளுடன் பாடத்தில் இல்லை. அவர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறப்படும் மாதத்துக்கு முன்பே, அதாவது, 1859, ஜனவரி 1ல், சிப்பா பரோட் என்ற இடத்தில் நடந்த சண்டையில் அவர் கொல்லப்பட்டார் என்பதுதான் உண்மை. அவர் கொல்லப்பட்டதை நேரில் பார்த்தவர் தான், இதை வரலாற்றில் பதிவு செய்துள்ளார். ஆனால், இன்று வரை தாந்தியா தோபே தூக்கிலிடப்பட்டார் என்பதைத் தான், நம் குழந்தைகளும் படித்து வருகின்றனர்’

என தெரிவித்துள்ளார்.