வடபழனி குமரன் காலனி சாலைக்கு மாண்டலின் ஸ்ரீநிவாஸ் பெயர்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்து குடும்பத்தினர் நன்றி

 

மறைந்த இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் நினைவு தினமான நேற்று, சென்னை வடபழனி குமரன் காலனி பிரதான சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டு, பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது. இதற்காக முதல்வர் ஸ்டாலினை அவரது குடும்பத்தினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மாண்டலின் எனும் மேற்கத்திய வாத்தியத்தில் கர்னாடக சங்கீதத்தையும் இசைக்க முடியும் என்பதை இளம் வயதிலேயே உலக இசை மேடைகளில் நிரூபித்துக் காட்டியவர் மாண்டலின் யூ.ஸ்ரீநிவாஸ். அவர் ஆந்திர மாநிலத்தில் பிறந்தாலும், தனது 6 வயது முதல் சென்னை வடபழனியில் உள்ள குமரன் காலனி அருகே வசித்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2014 செப்.19-ம் தேதி 45 வயதில் அவர் காலமானார்.

நலச் சங்கத்தினர் கோரிக்கை: இந்த நிலையில், மாண்டலின் ஸ்ரீநிவாஸ் வசித்த பகுதியில் உள்ள சாலைக்கு அவரது பெயரை வைக்குமாறு அவரது குடும்பத்தினர் மற்றும் குமரன் காலனி குடியிருப்போர் நலச் சங்கத்தினர் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில், குமரன் காலனி பிரதான சாலைக்கு அவரது பெயரை வைக்க முதல்வர் உத்தரவிட்டார். இந்நிலையில், அவரது நினைவு தினமான நேற்று, குமரன் காலனி பிரதான சாலைக்கு ‘மாண்டலின் ஸ்ரீநிவாஸ் முதன்மை சாலை’ என பெயரிடப்பட்டு, பெயர் பலகையை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் மாண்டலின் ஸ்ரீநிவாஸின் தந்தை சத்தியநாராயணா, தாயார் காந்தம், சகோதரர் மாண்டலின் ராஜேஷ், அவரது மனைவி ஹர்ஷா உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர். அவர்கள் பேசும்போது, ‘‘குமரன் காலனி பிரதான சாலைக்கு மாண்டலின் ஸ்ரீநிவாஸ் முதன்மை சாலைஎன பெயரிட்டு, பெயர் பலகை வைக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றனர். எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் நிறுவனத்தின் இயக்குநர்கள் டி.முரளிதரன், ஆர்.அனந்தகிருஷ்ணன் கூறும்போது, ‘‘ஸ்ரீநிவாஸ் பிறந்தநாளான பிப்.28-ம் தேதி குமரன் காலனி பிரதான சாலைக்கு அவரது பெயரை வைக்க முயற்சி எடுத்தோம். அப்போது முடியவில்லை. செப்.19-ம் தேதி (நேற்று) அவரது நினைவு நாளில் பெயர் வைக்கப்பட்டுள்ளது முதல்வருக்கு நன்றி’ என்றனர்.  இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், வீணை இசைக் கலைஞர்ராஜேஷ் வைத்யா ஆகியோரும் வாழ்த்தி பேசினர். தியாகராயநகர் எம்எல்ஏ கருணாநிதி, துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.