தேசப் பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தான் செய்த கொடுமையால் வங்க தேசத்தில் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். வங்க தேசத்தை காக்க நடந்த விடுதலைப் போராட்டத்தில் பாரதம் மிக முக்கிய பங்காற்றியது. பாரதத்தால்தான் வங்க தேசம் சுதந்திரம் பெற்றது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வங்க தேசத்தின் 50வது ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள, வங்கதேச பிரதாமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் 26,27 தேதிகளில் அரசுமுறைப் பயணமாக வங்க தேசம் சென்றார். ஆனால், பிரதமரின் இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை ஜனநாயக விதி மீறல் என்றும், இது மேற்கு வங்கத்தின் வாக்களிக்கும் முறையை பாதிக்கும் உள்நோக்கம் கொண்டது என்றும் கூறி மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் புகார் கடிதம் எழுதியுள்ளது.