ஏழை பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த முனுசாமி, திண்டிவனம் அமெரிக்கன் கிறிஸ்தவ உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வந்தார். பள்ளியில் பைபிள் பாடத்தை மனனம் செய்து ஒப்புவிக்கும் வகுப்பில் சிறப்பாக தேறினார். அப்போது பள்ளியின் நிர்வாகியான பாதிரியார், முனுசாமியை அணுகி, ”நீ எங்களது மதத்திற்கு மாறிவிட்டால் உனக்கு கல்வி கட்டணச் சலுகையுடன் உயர்கல்வியையும் தொடரலாம்” என ஆசை காட்டினார். ஆனால், கல்விக்காக மதம் மாறுவதற்கு மறுத்தார் முனுசாமி. ஆகவே, கல்வி கட்டணம் செலுத்த பள்ளி நிர்வாகிகள் உத்தரவிட்டனர்.
உடனே முனுசாமி, தனது பள்ளிப்படிப்பை அதோடு நிறுத்திக்கொண்டு தந்தையுடன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். சில காலத்திற்கு பின் சென்னை வியாசர்பாடியில் உள்ள கரபாத்திர சுவாமிகள் ஆசிரமத்தில் அவரது சீடராக இணைந்தார். பின்னாளில் சுவாமிஜி, அவருக்கு புதிய நாமகரணம் சூட்டி சொந்த ஊருக்கு சென்று சேவை செய்யுமாறு அனுப்பினார்.
இவ்வாறு சென்ற முனுசாமி, சொந்த ஊரில் தனது சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக இரு உயர்நிலைப்பள்ளிகளையும் ஒரு தொழிற்கல்விக் கூடத்தையும் இருபாலருக்குமான விடுதியையும் நிறுவி மிகச்சிறந்த கல்விப்பணியை ஆற்றினார். மேலும், தொடர்ந்து 34 ஆண்டுகள் தமிழ்நாடு சட்ட மேலவையிலும் சட்டமன்றத்திலும் உறுப்பினராக இருந்து பணியாற்றினார். இத்தகைய பெருமைக்கு சொந்தக்காரர்தான் பட்டியலின மக்களின் விடிவெள்ளியாக தென்னாற்காடு மாவட்டத்தில் விளங்கிய சுவாமி சகஜானந்தர் ஆவார்.