சுவாமி இராமதீர்த்தர் அமெரிக்காவில் தங்கியிருந்தபோது, ஒரு செல்வச் சீமாட்டி தன் மகனை இழந்த பிரிவின் துயரில் வாடிய நிலையில் அவரை சந்தித்தாள். செல்ல மகனின் மறைவு, அவளின் மனத்தில் அடிக்கடி தோன்றித் துயரத்தை வளர்த்துக் கொண்டிருந்தது. இராம தீர்த்தரிடம் தன் கவலையைச் சொல்லி மன அமைதி பெற வந்திருந்தாள்.
இராமதீர்த்தர் அவளிடம், ”அம்மையே, நீ கவலையை மாற்றவும், மகிழ்ச்சியை வாங்கவும் வந்திருக்கிறாயே! ஆனால், நீ வாங்க விரும்பும் மகிழ்ச்சியின் விலை மிகவும் கூடுதலாயிற்றே!” என்று கூறினார்.
“என்ன விலையானாலும் சரி. எனக்கு மகிழ்ச்சி வேண்டும்” எனப் பதிலளித்தாள் அந்த செல்வ சீமாட்டி.
“நீ உனது மகனை சாவுக்குக் கொடுத்துவிட்டுத் தத்தளிக்கிறாய்! சரி, அப்படியானால் நீ ஒரு கருப்பின சிறுவனைத் தத்துப் பிள்ளையாக ஏற்றுக்கொண்டு அவனை அன்போடு வளர்த்து வா” என்றார் சுவாமி இராமதீர்த்தர்.
இச்சொற்கள் அந்த அமெரிக்கப் பெண்ணின் நெஞ்சில் ‘சுரீர்’ என்று தைத்தன. ஏனென்றால் கருப்பர் இன மக்கள் மீது அமெரிக்கர்களுக்கு அவ்வளவு வெறுப்பு இருந்தது. அப்பெண் இராமதீர்த்தரிடம், “இது முடியாத காரியம்” எனத் தன் கருத்தை வெளியிட்டாள்.
“அப்படியானால் நீ மகிழ்ச்சியைப் பெறுவதும் முடியாத காரியந்தான்” என்று பதிலளித்தார் இராமதீர்த்தர். பின்னர் மனம் திருந்தி சுவாமியின் கருத்தை ஏற்று அதன்படியே நடந்து கொண்டாள்.