விழிப்புடன் இருப்போம் விதியை வெல்வோம்!

கொரோனா, அறிமுகம் தேவையில்லாத ஓர் அழையா விருந்தாளி. நம் நாட்டிற்குள் நுழைந்து ஓராண்டு ஆகியும் இன்னமும் இதைப்பற்றித்தான் பேச்சு. நம் வாழ்வில் இதனால் நிகழ்ந்த மாற்றங்கள்தான் எத்தனை எத்தனை!. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதக் கதைகள், அனுபவங்கள். பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை, தேர்வுகளின்றி தேர்ச்சி என மாணவர்களின் குதூகலம். பணி சுமையால் சில மணி நேரம்கூட குடும்பத்துடன் ஒன்றாக செலவிடமுடியாத பலரும் குடும்பத்துடன் சேர்ந்து சமைத்து, உண்டு, விளையாடியும் களித்தனர்.

சிலர் தங்கள் வேலையை, வாழ்வாதாரத்தை இழந்தனர். பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவ செலவிற்காக பல வருட சேமிப்பை இழந்தனர். இன்னும் சிலரோ உறவுகளை இழந்தனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பல மருத்துவர்களும் அவர் குடும்பத்தினரும் தொற்றுக்குள்ளாயினர். கனவுகளோடு மருத்துவப் பயணத்தைத் தொடங்கிய சில இளம் மருத்துவர்களையும், வழிகாட்டியாக இருந்த பல மூத்த மருத்துவர்களையும்கூட இழந்தோம். வாழ்விற்கும் சாவிற்கும் பாலமாக இருக்கும் மருத்துவர்களையும் சில நாள் அந்தப் பாலத்தில் பயணிக்கச் செய்தது கொரோனா.

நோயின் தன்மை, தொற்று, பாதிப்புகள் என கொரோனா பற்றி பாமரரும் பாடம் சொல்லும் அளவிற்கு மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வு கொடுத்துள்ளது. தொடர்ந்து கொடுத்தும் வருகிறது. ஆனாலும், எத்தனை பேர் விழிப்புணர்வுடன் இருக்கிறோம்? உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது என்ற மாயையால் நம்மில் பத்து சதவீதம்பேர்கூட பல இடங்களில் கவனமாக இருப்பதில்லை. வேடிக்கை என்னவெனில் சிலர் கொரோனா என்ற ஒன்று இல்லவே இல்லை; இது வெறும் கட்டுக்கதை, அரசியல் நாடகம் என்று நம்புவது தான். கொரோனாவால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு குணமானவர்களில் பலர், இன்னும் முழுமையாக குணமடையவில்லை. முன்பைவிட அதிக உடல் சோர்வு, மூட்டுவலி, சோகை, சுவையும் வாசனையும் பழைய நிலைக்குத் திரும்பாத நிலை, திரும்பிய பின்னரும் மனரீதியாக ஏற்காதது என உடலாலும் மனதாலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ ஆலோசனைக்குப் பின்னரே இதில் சிலர் தேறி வருகின்றனர்.

முன்னர் நோய்க்குத் தீர்வு இல்லாது, காத்துக்கொள்வது அறியாது தவறிழைத்தோம். ஆனால், இம்முறை நோய் பற்றி அறிந்திருந்தும் அலட்சியமாக இருக்கிறோம். தடுப்பூசி இருந்தும் வதந்திகளாலும், அச்சத்தினாலும் போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றோம். தொழில்நுட்ப வளர்ச்சியால் சிலரால் பொய்யான செய்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. யாரையும் குறைசொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. நம்மை நாம் தான் காத்துக்கொள்ள வேண்டும். நமக்கு ஏதும் நிகழ்ந்தால் நாமும் நம் குடும்பத்தினரும் மட்டுமே பாதிக்கப்படுவோம் என்பதை கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் இருப்போம்.