மதுரை ஆதீனம் கேள்வி

மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் கடந்த ஆகஸ்ட் 23ல் முடிசூட்டப்பட்டார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘மக்களோடு மக்களாக எப்போதும் தொடர்பில் இருப்பேன். அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்ற போராட்டத்திற்காகக் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைப் பயணம் மேற்கொண்டவன் நான். எல்லா அரசியல் கட்சிகளுடனும் தொடர்புடையவன். மக்கள் மத்தியில் தேசப்பற்று குறைந்து வருவதால் தேவார பாடசாலை மூலம் தேசப்பற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எந்நேரமும் மடத்திற்கு வந்தால் அன்னதானம் உண்டு. மதுரை ஆதீன மடத்தின் சார்பில், சிறந்த ஓதுவாருக்கு ஞானசம்பந்தர் விருது, சைவ சமயத்தில் சிறப்பாக செயல்படும் பெண்மணிக்கு மங்கையர்க்கரசி விருது. பாண்டித்துரை தேவர் பெயரில் ஒரு விருது, தியாகத்திற்காக வ.உ.சி விருது, மதுரை ஆதீனத்திடம் தீட்சை வாங்கிய வள்ளலார் பெயரில் ஒரு விருது என ஐந்து விருதுகள் வழங்க உள்ளோம்’ என தெரிவித்தார். மேலும், ‘சமூக நல்லிணக்க மாநாடுகளுக்கு அழைத்தால் செல்வேன் நான் குர்ஆனையும், பைபிளையும் ஏற்றுக்கொள்கிறேன். கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் ஹிந்து சமயத்தில் தரப்படும் விபூதியைப் பூசிக்கொள்வார்களா, ஹிந்து சமயத்தை முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் ஏற்றுக்கொள்வார்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.