பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் மத நிந்தனை செய்த குற்றச்சாட்டில் நௌதன் லால் என்ற ஹிந்து ஆசிரியருக்கு உள்ளூர் நீதிமன்றம் 25 வருட ஆயுள் தண்டனையும் 50 ஆயிரம் பாகிஸ்தானி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. 2019 செப்டம்பரில், நௌதன் லால், பள்ளியில் நபிக்கு எதிராக நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த செய்தி பரவியதும், நகரத்தில் வன்முறை போராட்டம் வெடித்தது. கோட்கியில் உள்ள சச்சோ சத்ரம் தாம் கோயிலை வன்முறையாளர்கள் தாக்கி சிலைகளை சேதப்படுத்தினர். ஜமாத் இ அஹ்லே சுன்னத் கட்சியின் தலைவர் அளித்த மத நிந்தனைச் புகாரினையடுத்து நௌதன் லால் கைது செய்யப்பட்டார். 2019 முதல் விசாரணைக் கைதியாக சிறையில் இருக்கும் லால் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளிக்க இரண்டு ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. அவரது ஜாமீன் மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. மதசகிப்புத் தன்மையற்ற முஸ்லிம் நாடான பாகிஸ்தானில், மத நிந்தனை செய்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அடிக்கடி பயங்கரவாதிகளால் துன்புறுத்தப்படுகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் தனிப்பட்ட பகைகள் மற்றும் நிலத் தகராறுகளைத் தீர்ப்பதற்கு மத நிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று மனித உரிமை, சிவில் உரிமை குழுக்கள் புகார் தெரிவித்துள்ளன.