கொரோனா இரண்டாம் அலை காரணமாக அதன் தாக்கமும் வீரியமும் அதிகரித்து பலரும் மருத்துவமனைகளில் சேர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நாடு முழுவதும் நிலவுகிறது. மகராஷ்டிரா, குஜராத் போன்ற இடங்களில் இதன் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், இந்த ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க, இதற்கு இணையாக, எந்தவொரு தளவாட சிக்கலும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின், நைட்ரஜன் சப்ளை செய்யும் டேங்கர் லாரிகளில் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல மகாராஷ்டிர அரசு முடிவெடுத்துள்ளது. அனைத்து டேங்கர்களுக்கும் போதுமான போலீஸ் பாதுகாப்பு, சாலைகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. தவிர, மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜனை வழங்கும் தனியார் நிறுவனங்கள் வரவிருக்கும் நாட்களில் அவற்றின் திறன்களை அதிகரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனம் குஜராத்தில் உள்ள தனது ஜாம்நகர் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையில் இருந்து மகாராஷ்டிராவுக்கு இலவசமாக 100 டன் அளவிலான ஆக்ஸிஜனை சப்ளை செய்யத் தொடங்கியுள்ளது. போதுமான ஆக்ஸிஜன் விநியோகத்தை உறுதி செய்வதற்கான மற்றொரு முயற்சியாக, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், தென்னிந்தியாவில் உள்ள கொச்சி சுத்திகரிப்பு நிலையத்தில் 20 டன் ஆக்ஸிஜனை தயாராக இருப்பு வைத்துள்ளது. இந்நிலையில், தற்போதைய தேவைக்கு அதிகமாகவே, அக்ஸிஜன் கையிருப்பு உள்ளது. மாநில அரசுகள் ஆக்சிஜனை வீணடிக்காமல், தேவை அறிந்து பயன்படுத்த வேண்டும். ஆக்சிஜன் தேவை குறைவாக உள்ள மாநிலங்களின் கையிருப்பை, தேவை அதிகமுள்ள மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல, சாலை போக்குவரத்து துறை, ரயில்வே அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து பணியாற்ற, குழு அமைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.