அரசியல்வாதி என்னும் ஆசிரியர்

பொதுவாகவே, அரசியல்வாதிகளிட மிருந்து கற்றுக்கொள்ள நிரம்ப உள. அதுவும் தேர்தல் காலத்தில் இன்னமும் அதிகம்.
பள்ளிக்கூடம் போகாமலே அரசியல்வாதிகளுள் பலர் கல்வியில் சாதித்தவர்கள் அன்று. பலர் பள்ளிப் படிப்பைக்கூட முடித்தவர்கள் அன்று. ஆனால், அவர்கள் கற்றுக்கொடுப்பவை புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களுள்கூட நமக்குக் கிடைக்காதவை.
உயர்தரத்தவர் ஆசிரியர்களின் தரம் மூன்று. புத்தகத்தில் உள்ளதைப் படித்துக் காட்டுபவர் அதமர். விளக்கிச் சொல்லிப் புரியவைக்க முயல்பவர் மத்யமர். சொல்லாமல் சொல்லி அவர்கள் வாழ்க்கையிலிருந்து நம்மைக் கற்றுக்கொள்ள வைக்கும் உத்தம ஆசிரியர்கள் அன்றோ அரசியல்வாதிகள்?
அர்த்தமே வேறுதான்! ஒரு பாடத்தைப் படிக்க ஆசிரியரின் மொழியை முதலில் புரிந்துகொள்ள வேண்டுமே. பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைக்கு அவர் ‘ஆஹா, செய்துவிடலாமே’ எனில் ‘ஆகட்டும் பார்க்கலாம்’ எனப் பொருள் கொள்ள வேண்டும். ‘ஆகட்டும் பார்க்கலாம்’ எனில் ‘முடியாது’ எனப்பொருள். ‘முடியாது’ எனச் சொன்னால் அவர் அரசியல்வாதியே அன்று. ஆகவே, அவர்கள் சொல்லாத சொல்லுக்கும் பொருள் உண்டு!
நேற்று இல்லை நாளை இல்லை தத்துவ ஞானிகள் சொல்வதை அரசியல்வாதி நடத்திக் காட்டுகிறார். ‘நேற்று என்பது மரணித்துவிட்டது. நாளை என்பது இன்னமும் பிறக்கவில்லை. ஆகவே, இன்றைய வாழ்வில் கவனம் வை’ என்பது இவர்களுக்கு மஹா வாக்கியம். ‘நேற்றைக்கு நாம் எதிர்க்கட்சியாக இந்தத் திட்டத்தை எதிர்த்தோமே, இன்றைக்கு ஆளுங்கட்சியாக இதையே நடைமுறைப் படுத்துகிறோமே’ என்றோ, ‘தேர்தலில் கொடுக்கும் வாக்குறுதியை நாளை செயல்
படுத்த வேண்டும்’ என்றோ சிறிதும் கவலையே படாமல், ‘இன்றைய வசூலைப் பற்றி மட்டுமே பார்’ என்னும் பாடம் படிக்கவில்லையா நீங்கள்?
அண்ணன் என்னடா தம்பி என்னடா நம் சொந்தமே ஆனாலும் அவரிடம் வேலையை, பணத்தை ஒப்படைக்கும்போதே தன் தொண்டர் அடிப்பொடியைவிட்டு அவர்மீது கண் வைக்கவேண்டும். கையைமீற முயலும் நகத்தைப்போல வெட்டி எறியவேண்டும். அதேபோல, சில வருடங்கள் முன்னர் நம் அண்ணனை, அப்பாவைக் கொன்ற தரப்பு, நம் தங்கையைச் சிறைக்கு அனுப்பிய கட்சி ஆயிற்றே என்று பார்க்கலாமோ? இந்தத் தேர்தலில் ஆதாயம் உண்டு எனில், தயங்காமல் கூட்டணிக்கு ஒப்புக்கொள் எனப் பதவியைப் பிடிக்க முயலும் இலட்சியவாதிகள்!
பிரித்தால் ஆளலாம் ஒரு பெரிய பிரச்சினையா? எதிர்க்கட்சிகளை ஓர் அரசியல்வாதி எப்படிப்
பிரித்து, தன் எதிர்ப்பு வாக்குகளைச் சிதறடிக்கிறாரோ, அப்படி அந்தச் சவாலை பகுதிப் பகுதியாய்ப் பிரித்துத் தனித்தனியாய்க் கவனித்துக் கையாண்டால் சமாளித்துவிடலாம் அல்லவா?
அப்படியும் முடியவில்லை எனில், சிரித்துக்கொண்டே கைகுலுக்கக் கற்றுக் கொள். ஆசை வெட்கமறியுமோ?