மிகப்பெரிய ஆக்ஸிஜன் உற்பத்தி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பாரதத்தில் மிகப்பெரிய மருத்துவத் தரத்திலான திரவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் நிறுவனமாக உருவாகியுள்ளது. இது தற்போது பாரதத்தின் மொத்த மருத்துவ ஆக்ஸிஜனில் 11 சதவீதத்திற்கும் அதிகமாக உற்பத்தி செய்துவருகிறது. அதாவது, 10 நோயாளிகளில் ஒருவர் இந்த ஆக்ஸிஜனை பெறுகிறார். ரிலையன்ஸ் 15,000 மெட்ரிக் டன் மருத்துவ தர திரவ ஆக்ஸிஜனை இலவசமாக வழங்கியுள்ளது. இதனால் 15 லட்சம் நோயாளிகள் பயனடைந்துள்ளனர். இத்தனைக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒரு பாரம்பரிய ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனம் அல்ல. அதன் சொந்த பயன்பாட்டிற்காக அதன் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை அது நிறுவியுள்ளது. ஆனால் இப்போது அங்கிருந்து மக்களின் உயிர் காக்கும் ஆக்ஸிஜன் தினசரி 1000 மெட்ரிக் டன் அளவிற்கு உற்பத்தி செய்யும் வகையில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்காக 24 ஐ.எஸ்.ஓ கன்டெய்னர்களை விமானத்தில் கொண்டு வந்து பாரதத்திற்கு கூடுதலாக 500 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்ஸிஜனை வழங்க உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.