தி கேரளா ஸ்டோரி குறித்து கங்கனா ரணாவத்

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் குறித்து தனியார் செய்திச் சேனல் ஒன்றிடம் பேசியபோது, “நான் இன்னும் அந்தப் படத்தை பார்க்கவில்லை. ஆனால், படத்தைத் தடை செய்ய நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். அதேசமயம், தவறு இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள், படத்தை தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. நாட்டின் பொறுப்புமிக்க அமைப்பான நீதிமன்றமே இப்படிச் சொல்கிறது என்றால், அது சரியாகத்தான் இருக்கும். இந்த படத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை மையப்படுத்தி மட்டுமே காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக நினைக்கிறேன். ஐ.எஸ்.ஐ.எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு. இதை நான் சொல்லவில்லை. நமது நாடும், உள்துறை அமைச்சகமும் மற்றும் பிற நாடுகளும் அவர்களை பயங்கரவாதிகள் என்றுதானே குறிப்பிடுகின்றன? ஆகவே, இந்த திரைப்படத்தைவிட நீங்கள் தான் இங்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று நீங்கள் நினைத்தால், நீங்களும் ஒரு பயங்கரவாதிதான். அதேபோல, இப்படம் எங்களை தாக்குகிறது என்று நீங்கள் கூறினால் நீங்களும் ஒரு பயங்கரவாதிதான்” என்று கூறியிருக்கிறார்.