திராவிட மாடல் என்று கூற இது கட்சி கூட்டமல்ல

சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அவ்வகையில், இந்தாண்டுக்கான முதல் கூட்டம் நேற்று ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது.காலை 10 மணிக்கு கூட்ட அரங்கில் ஆளுநர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். உரையைத் தொடங்கிய ஆளுநர், “தமிழக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்” என்று அழகியத் தமிழில் தனது பேச்சைத் துவங்கினார். மேலும் ‘முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்’ என்று தமிழில் வாழ்த்துக்கூறி தனது உரையை தொடங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. வாழ்க பாரதம், ஜெய் ஹிந்த் என்று கூறி தனது உரையை முடித்தார். இந்நிலையில் ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ‘திராவிட மாடல்’, ‘தமிழ்நாடு’ போன்ற வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்து விட்டதாக தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உட்பட அனைத்து தி.மு.கவினரும் அதன் கூட்டணி கட்சியினரும் குற்றஞ்சாட்டினர். ‘பிரிவினைவாத கருத்துகளையும் திராவிட மாடல் உள்ளிட்ட தி.மு.கவின் சுயவிளம்பர கருத்துகளையும் தவிர்த்துவிட்ட ஆளுநர் ஆர்.என் ரவிக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று, இந்த சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளில், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விளிம்புநிலை கூறுகளாக செயல்பட்டன. அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக, மாண்புமிகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் உரையை இடையூறு செய்து சபைக்கு அவமானத்தை ஏற்படுத்தியது தி.மு.க அரசு. மாண்புமிகு ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்பே தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகள், அடியாட்களின் நடத்தையை வெளிப்படுத்தி போராடத் தயாராகிவிட்டனர். சூழல் மற்றும் உண்மைக்குப் புறம்பாக தயாரிக்கப்பட்ட உரையை வாசிக்கும்படி ஆளுநரை, கட்டாயப்படுத்த முடியாது. ஆளுநரின் உரையில் “திராவிட மாடல்” போன்ற வார்த்தைகளைக் குறிப்பிடுவதற்கும் அவர் அதை வாசிப்பார் என்று எதிர்பார்ப்பதற்கும் இது ஒன்றும் அவர்களின் கட்சி நிகழ்வு அல்ல என்பதை தி.மு.கவுக்கு நினைவுபடுத்த வேண்டும். சமீபகாலமாக பெட்ரோல் குண்டுவெடிப்பு, தற்கொலை குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்களை மாநிலம் சந்தித்து வரும் நிலையில், சட்டத்தை மீறிய தி.மு.க அரசு, ஆளுநர் மாநிலத்தை அமைதியின் உறைவிடமாக குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நகைச்சுவையைத் தவிர வேறில்லை. ஆளுநர், நமது மீனவர்களைத் திருப்பிக்கொண்டுவரும் மத்திய அரசின் முயற்சிகளை குறிப்பிட்டார். ஆனால், தமிழக முதல்வர் அதனை தனது முயற்சியாக காட்டிக்கொள்ள முயன்றார். இது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சபாநாயகர் அப்பாவுவால் நடுநிலையைக் கடைப்பிடிக்கவில்லை. அவர் தனது எஜமானரை சமாதானப்படுத்த முயன்றார். ஆளுநர் சட்டசபையில் இருந்தபோது, அவரது உரையின்போது தமிழக முதல்வர் தலையிட்டது அவமரியாதை செய்யும் செயல் மற்றும் அமெச்சூர் தனமானது. கடந்த காலங்களில் வாய்மூடிக்கொண்டு வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கும் ஆளுநரின் பங்கை தி.மு.க போற்றியது. ஆனால், நமது ஆளுநர் ஆர்.என் ரவி தனது அரசியலமைப்புப் பொறுப்பை சரியாக செய்வதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.