வேறு மாநிலங்களுக்கு செல்லும் முதலீடுகள்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தேசிய தொழில் அமைப்பான ‘லகு உத்யோக் பாரதி’ சார்பில் தென் மண்டல மாநாடு கோவையில் நடைபெற்றது. பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், மாநாட்டை தொடங்கி வைத்தார். மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “இன்று பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரனமாக உலக நாடுகள் தவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான சிறப்பான ஆட்சி காரணமாக பாரதத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. கொரோனா தொற்று பரவல் காலத்திலும் நமது நாட்டின் தொழில்துறை நெருக்கடியில் இருந்து மீள உதவும் வகையில் அவசர கால கடனுதவி திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது. நமது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான எம்.எஸ்.எம்.இ துறை குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின் கீழ், 6.3 கோடிக்கும் அதிகமான தன்னம்பிக்கையும் துடிப்பும் கொண்ட எம்.எஸ்.எம்.இக்களுடன் நாம் வேகமாக மாறி வருகிறோம். மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பர் பாரத் ஆகியவை வளர்ச்சியின் அடிப்படையில் நமது நாட்டை வளர்ச்சிக்கு அழைத்துச் செல்கின்றன. நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் ஊழல் அதிகரித்து காணப்படுவதால் இங்கு தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உரிமம் பெறுதல் முதல், தொழில் தொடங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பெரும் தொகையை தொழில்துறையினர் லஞ்சமாக கொடுக்க வேண்டியுள்ளது. இந்த அவலநிலை காரணமாக தமிழகத்துக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகளில் பலவும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்றுள்ளன. இது தமிழக வளர்ச்சிக்கு நல்லதல்ல” என கூறினார்.