நெதர்லாந்து மன்னர் மற்றும் அரசியின் அழைப்பின் பேரில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரது மனைவியுடன் மூன்று நாள் பயணமாக நெதர்லாந்து சென்றுள்ளார். 1988ல் அன்றைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கடராமன் நெதர்லாந்துக்கு விஜயம் செய்த பின்னர், 34 வருடங்களில் நெதர்லாந்துக்கு பாரத குடியரசுத் தலைவர் மேற்கொள்ளும் விஜயம் இது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ராம்நாத் கோவிந்த் பாரதத்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான நீடித்த நட்புறவின் அடையாளமாக, புதிய மஞ்சள் நிற துலிப் மலர்களுக்கு ‘மைத்ரி’ என்று பெயரிட்டார். இதுகுறித்து பேசிய நெதர்லாந்தின் துணைப் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான வோப்கி ஹோக்ஸ்த்ரா, ‘உலக அரங்கில் மிக முக்கியமான நாடு பாரதம். பாரதமும் நெதர்லாந்தும் தூதரக உறவுகளின் 75 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றன. குடியரசுத் தலைவரின் வருகை எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது, பாரதத்துடனான நட்பை நாங்கள் மதிக்கிறோம். மேலும், பாரத புலம்பெயர்ந்தோரை இங்குக் கொண்டிருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவர்கள் எங்கள் சமூகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டுள்ளனர். சமூகத்திற்கு ஒரு பெரிய பங்களிப்பை அளிக்கின்றனர். அவர்கள் வணிகம், தொழில் என வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள்’ என தெரிவித்தார்.