சனாதனத்தை எதிர்க்கவே இண்டியா கூட்டணி

சென்னை:”இண்டியா என்பது, சனாதன கொள்கைக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி தான். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம்.

”ஆனால், சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதில், யாருக்கும் எந்த வேறுபட்ட கருத்தும் இல்லை,” என, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கண்டனம்

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில், சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது.

இதில், அமைச்சர் உதயநிதி பேசுகையில், ‘கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பது போல, சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு, ‘இண்டியா’ கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளே கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், அந்த மாநாட்டில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் சர்ச்சை யாக பேசியுள்ளது, தற்போது தெரிய வந்து உள்ளது.

அவர் பேசிய வீடியோவை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தன், ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கூட்டத்தில் பொன்முடி பேசியதாவது:

சமுதாய சமத்துவம், பொருளாதார சமத்துவம் இருந்தால் தான், நாடு முன்னேறும் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. இது தான் ஜனநாயகத்திற்கு தேவையான கொள்கை.

சனாதனத்தை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் கவுதம புத்தர். மனு தர்மம், வர்ணாசிரமத்தை எதிர்த்து குரல் கொடுத்தார்.

உண்மையில் அவர் கொள்கை, இந்தியாவில் நிலை நிறுத்தப்பட வேண்டிய கொள்கை.

ஏற்றத் தாழ்வு

 

எந்த தனிப்பட்ட பிராமணருக்கும், நாம் எதிர்ப்பானவர்கள் அல்ல. ஆனால், பிராமணியத்துக்கு எதிர்ப்பு. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையான நோக்கத்தை, இளைஞர்களிடம் பரப்ப வேண்டும். சனாதனம் என்பது ஜாதி, மத ஏற்றத் தாழ்வுகள்.

எல்லா மதமும் உள்ளது. இந்த மதத்தில் தான் வர்ணாஸ்ரமம் உள்ளது. இந்த ஜாதி உயர்ந்தது என படிக்கட்டுகளாக உருவாக்கப்பட்டது.

அதைத்தான் எதிர்க்கிறோம். அமெரிக்காவில் நிறத்தின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு. தமிழகத்தை, இந்தியாவை பொறுத்தவரை, ஜாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை வளர்த்து இருக்கிறோம். அந்த ஜாதிய ஒழிப்பை உருவாக்க வேண்டும் என்பது, நம் அடிப்படைக் கொள்கை.

சனாதனத்தை நிலை நிறுத்த, மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ., முயற்சிக்கிறது.

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வருகின்றனர். ‘விஸ்வகர்ம யோஜனா’ என்ற பெயரில், குலத்தொழிலை புகுத்த, 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளனர்.

இதைத்தான் சனாதனம் கூறுகிறது. அப்பா செய்த வேலையை மகன் செய்ய வேண்டும் என்கிறது. அதை எதிர்ப்பது திராவிட மாடல்.

சனாதனத்துக்கு ஆதரவாக இருப்பது பா.ஜ., ஆட்சி. சனாதன கொள்கையை ஒழிப்பது தான் நம் கொள்கை.

சனாதன ஒழிப்பை இளைஞர்கள் உள்ளத்தில் பதிய வைக்க வேண்டும். படிக்கும் மாணவர்களிடம் இந்த உணர்வை ஏற்படுத்த வேண்டும். முதலில் நம் வீட்டு பிள்ளைகளுக்கு இந்த கொள்கைகளை எடுத்துக் கூற வேண்டும்.

கருத்து வேறுபாடு

 

‘நீட்’ தேர்வும் சனாதனத்தின் ஒரு பகுதி தான். ‘இண்டியா’ என்பது சனாதன கொள்கைக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி தான். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம்.

ஆனால், சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதில், யாருக்கும் எந்த வேறுபட்ட கருத்தும் இல்லை.

இதில் இருப்பவர்கள் அனைவரும் சமத்துவத்தை உருவாக்க வேண்டும். சிறுபான்மை சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும்.

ஆண், பெண் சமத்துவத்தை காப்பாற்ற வேண்டும் என்ற சமூக சிந்தனையோடு இந்த இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்பது தான், 24 கட்சிகள் உருவாக்கி உள்ள, ‘இண்டியா’ கூட்டணியின் நோக்கம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

அமெரிக்காவில் நிறத்தின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு. இந்தியாவை பொறுத்தவரை, ஜாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை வளர்த்து இருக்கிறோம்.

உண்மை முகம் இதுதான்

‘இண்டியா’ கூட்டணி சனாதன தர்மத்தை எதிர்த்து உருவாக்கப்பட்டது’ என்று அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். ஹிந்து மதத்தை ஒழிப்பது என்பது, இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளின், ஒற்றைப் புள்ளி நிகழ்ச்சி நிரலாக தெரிகிறது. இதுதான், ‘இண்டியா’ கூட்டணியின் உண்மை முகம்.தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பெண் பிரதிநிதிகள் மீது ஜாதி வெறியை பரப்பிவிட்டு, சமூகத்தில் சமத்துவம் மற்றும் பாலின சமத்துவம் குறித்து மேடையில் தி.மு.க., அமைச்சர் பொன்முடி பேசியது துரதிர்ஷ்டவசமானது.- அண்ணாமலை,தமிழக பா.ஜ., தலைவர்.