அதிகரிக்கும் பேருந்து மாணவர்கள் மோதல்

சென்னையில் இரு தினங்களுக்கு முன் பெரம்பூருக்கு சென்ற ஒரு மாநகரப் பேருந்தில் புரசைவாக்கம் பகுதியில் ஏறிய பள்ளி மாணவர்கள் பேருந்தில் தொங்கியும், கூரையில் ஏறியும் ஆபத்தான முறையில் பயணித்தனர். இதை நடத்துனர் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கற்களால் நடத்துனரை தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். இதில் நடத்துனருக்கும் பெண் பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதனை கண்டித்து பேருந்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும் ஆங்காங்கே பேருந்தை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரணம்:

திராவிட கட்சிகள் பள்ளிகளில் இருந்து திட்டமிட்டு நீக்கிய ஒழுக்கக் கல்வி பாடதிட்டம், அதிகரித்து வரும் மது, போதை பழக்கவழக்கங்கள், சிதைந்த கூட்டுக்குடும்ப முறை, அதிகரிக்கும் மதமாற்றங்கள், பிள்ளைகளை கவனித்து வளர்க்காத பெற்றோர், ஒரு குழந்தை பெற்றுக்கொள்வது, அதனால் அதிகரிக்கும் செல்லம், சமூகத்துடன் இணைந்து வாழப் பழகாத இளம் தலைமுறை, சுற்றுச்சூழல், உணவு, உடைப் பழக்கவழக்கங்கள், ஒழுக்கம், பக்தி, தர்மம், நீதி, மரியாதை, பண்பாடு போன்றவற்றை கற்றுத்தர மறந்த சமூகம், திராவிட மாயை, நாத்திக திணிப்பு, வளர்ந்துவிட்ட இணைய பயன்பாடு என இதற்கு பல காரணங்களை சொல்லமுடியும். நல்ல இளம் தலைமுறை உருவாக இவற்றை உடனடியாக சீர்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நிரந்தர தீர்வு அவசியம்:

சமீப கலமாக பள்ளி கல்லூரி மாணவர்கள் இப்படி நடந்துகொள்வது அதிகரித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது, இதனை விசாரித்து, மாணவர்களுக்கு உரிய தண்டனையுடன், மனநல ஆலோசனைகளும் தொடர்ந்து கொடுக்கப்பட்டால் மட்டுமே இதனை தடுக்கமுடியும். பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மனநல மருத்துவர்கள், காவல்துறை, அரசு அதிகாரிகள் என அனைவரும் அடிப்படையை சரிசெய்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு காணமுடியும்.

தார்மீக உரிமை உண்டா?

அரசுப் பேருந்து ஊழியர்கள், தங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால், சாலைகளின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டம் செய்வது, தங்கள் பிரச்சனைகாக பொதுமக்களை கஷ்டப்படுத்துவது பல காலங்களாக நடக்கிறது. ஓட்டுவங்கி அரசியல்வாதிகள் இதனை கண்டுகொள்வதில்லை. சமீபத்தில் ஒரு அரசுப் பேருந்து ஓட்டுனரின் கையை கிழித்துவிட்டு சென்ற தி.மு.க உடன்பிறப்பை எதிர்த்து போராடாதபோதே அரசுப் பேருந்து ஊழியர்கள் போராட்டம் நடத்தும் தங்களது தார்மீக உரிமையை இழந்துவிட்டனர். அப்போது போராடாத இவர்கள் இப்போது போராடுவது, தி.மு.க அரசு மற்றும் ரௌடிகளின் மீதான அவர்களின் பயத்தையும், சுயநலத்துக்காக தொண்டர்களை கைகழுவிய தலைவர்களின் நடத்தையையும் காட்டுகிறது. இதனை அவர்களும் உணர வேண்டும்.

மதிமுகன்