ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்கத்தொகை

மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் (பி.ஐ.ஆர்.ஏ.சி) டெலிமெடிசின், டிஜிட்டல் ஹெல்த் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) ஆகிய துறைகளில் 75 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் சிறப்பு ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு விரைவில் துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. பாரதத்தின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில் 75 சிறந்த கண்டுபிடிப்புகளை அடையாளம் காணும் பணியும் துவங்கியுள்ளது.

பி.ஐ.ஆர்.ஏ.சி நிறுவனம் உயிரி தொழில்நுட்ப சுற்றுச்சூழல் வளர்ச்சிப் பிரிவுகளில் ஸ்டார்ட்அப் இந்தியா, மேக் இன் இந்தியா திட்டங்களின் கீழ் பல்வேறு புதிய முயற்சிகளை ஊக்குவித்தும் ஆதரித்தும் வருகிறது. 2010ல் துவக்கப்பட்ட இந்நிறுவனம், 1,500க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப், நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2128 கோடிக்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது. கடந்த 2012ல் 50 க்கும் குறைவான உயிரி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களுக்கு நிதியுதவி அளிக்க 10 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டது. ஆனால், தற்போது, 5,000 க்கும் மேற்பட்ட பயோடெக் ஸ்டார்ட் அப்களுக்கு ரூ. 2,500 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. வரும் 2024ம் ஆண்டுக்குள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயோடெக் ஸ்டார்ட்அப்களை ஆதரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.