கனிமொழிக்கு ஆதரவளித்ததால் புறக்கணிப்பு

திருச்சி சிவா, நாடாளுமன்ற தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவராகவும், தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளராகவும் உள்ளார். இவரது மகன் சூர்யா சிவா தி.மு.கவில் இருந்து விலகி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார். இது தொடர்பாகத் தனியார் செய்தி நாளிதழுக்கு சூர்யா சிவா அளித்த பேட்டியில், “15 ஆண்டுகளாக தி.மு.கவில் கட்சி பணியாற்றி இருக்கிறேன். நான் கனிமொழி ஆதரவாளர் என்பதால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தேன். மேலும், ஜாதி மறுப்பு காதல் திருமணம் செய்துகொண்ட என்னையும், எனது மனைவி மற்றும் குழந்தையையும் எனது தந்தை இன்றுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவரின் நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைமைக்குத் தெரியப்படுத்தியும், அவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. தி.மு.க ஆட்சியில் இல்லாத போது கட்சிக்காகக் கடுமையாக உழைத்த பலர் புறக்கணிக்கப்படுகிறார்கள். புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்களுக்குப் பதவிகள் வழங்கப்படுகின்றன. இதனால், தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. எனவே, தொலைநோக்கு பார்வையில் பா.ஜ.கவில் இணைந்துள்ளேன். பா.ஜ.கதான் நாட்டை வலுப்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் பா.ஜ.க விரைவில் ஆட்சி அமைக்கும்” என கூறியுள்ளார்.