கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உலகளாவிய தொண்டு அமைப்பான, ‘சேவா இன்டர்நேஷனல்’ சார்பில் உணவு, மருந்து பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு வெளிநாடுகளில் செயல்படும் ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் (ஹெச்.எஸ்.எஸ்) அமைப்பின் ஒரு பிரிவான ‘அகண்ட தமிழ் உலகம்’ என்ற அமைப்பும் இலங்கை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இது தொடர்பாக பேசிய அகண்ட தமிழ் உலகம் அமைப்பின் இலங்கை ஒருங்கிணைப்பாளர் மகா கணேசன், ‘இலங்கை பொருளாதார நெருக்கடியால், மலையக பகுதிகள், தலைமன்னார் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அடையாளம் கண்டுள்ளோம். நுவரெலியா, கண்டி, மட்டாரா, மன்னார் உள்ளிட்ட பல மாவட்டங்களில், 5,௦௦௦க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, தலா ரூ. 5,000 மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பை வழங்கியுள்ளோம். தமிழர்கள் மட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் அனைவருக்கும் உதவி வருகிறோம். இதற்காக, உலகெங்கிலும் உள்ள, அகண்ட தமிழ் உலகம், சேவா இன்டர்நேஷனல் அமைப்பினர் நிதியுதவி செய்து வருகின்றனர். குறைந்தது ஒரு லட்சம் குடும்பங்களுக்கு உதவி செய்ய முயன்று வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.