மடகாஸ்கரில் ஹிந்து கோயில்

26 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மிகப் பெரிய தீவான மடகாஸ்கரின் தலைநகரான அண்டனானரிவோவில் கடந்த செவ்வாயன்று ஒரு பிரமாண்டமான ஹிந்து கோயில் திறக்கப்பட்டது. இவ்விழாவில் பல்வேறு ஹிந்து தெய்வங்களின் சிலைகள் ஸ்தாபிக்கப்பட்டன. சிறப்பு அலங்காரம்,  ஆரத்தி, பஜனை, பக்தி பாடல்கள் பாடி பக்தர்கள் அதனை கொண்டாடினர். மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் ஆகிய நாடுகளுக்கான பாரதத் தூதர் அபய் குமார் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். புதிதாகக் கட்டப்பட்ட இக்கோயில் அண்டனானரிவோவில் உள்ள முதல் ஹிந்துக் கோயிலாகும். மடகாஸ்கரில் புலம்பெயர்ந்த ஹிந்துக்களால் நீண்டகால ஆசை இதனால் நனவாகியுள்ளது.

ஹிந்து சமாஜத்தின் தலைவர் சஞ்சீவ் ஹேமத்லால் இதுகுறித்து பேசுகையில், “மடகாஸ்கரில் உள்ள ஹிந்து சமுதாயத்தினருக்கு இன்று பிரமாண்ட கோவில் திறக்கப்பட்டிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. 20,000க்கும் மேற்பட்ட பாரத வம்சாவளியினர் இங்கு உள்ளனர், பெரும்பாலும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் மடகாஸ்கரில் குடியேறியுள்ளனர். அவர்களில் பலர் ஹிந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள். மடகாஸ்கரின் மற்ற முக்கிய நகரங்களான மஹாஜுங்கா மற்றும் அன்சிரானானாவில் சிறிய ஹிந்து கோயில்கள் உள்ளன என்றாலும் ஹிந்து சமாஜத்தால் அந்தனானரிவோவில் பெரிதாக இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இந்த புதிய ஆலயத்தில் ஹிந்துக்கள் அடிக்கடி ஒன்றுகூடி இறைவனை வணங்கவும் சமூகத்தின் உணர்வை வலுப்படுத்தவும் இது உதவும்” என்றார்.

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்தியப் பெருங்கடல் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக, பெரும்பாலும் குஜராத்தில் இருந்து, சிறிய படகுகளில் பாரத தேசத்தவர்கள் மடகாஸ்கருக்கு சென்றனர், இரு நாடுகளின் வர்த்தக வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்தனர். 2021ம் நிதியாண்டில் இருதரப்பு வர்த்தகம் சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் மடகாஸ்கரின் முக்கிய வர்த்தக பங்காளியாக பாரதம் உள்ளது. இரு நாடுகளும் ஆரோக்கியமான மற்றும் வலுவான உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், தகவல்தொடர்பு, சுற்றுலா போன்ற முக்கிய துறைகளில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டுள்ளன.