பாரதியார் பல்கலையில் பாரதப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல துணை வேந்தர்கள் சந்திப்பு கூட்டம் இரண்டு நாட்கள் நடக்கிறது. இக்கூட்டத்தை தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அப்போது பேசிய ஆளுனர், ‘கல்வி தனித்திருக்க வேண்டியது இல்லை. அது தேசிய அளவில் இருக்க வேண்டும். நாம் அனைவரும் உயர்கல்வியை மாற்றி அமைக்க பாடுபட வேண்டும். இளைஞர்கள் தான் நமது எதிர்காலம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 2014ல் பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பின் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பார்வை மாறிவிட்டது. சங்ககால படைப்புகளிலேயே பாரதம் என்ற வார்த்தை உள்ளது. ‘செப்புமொழி பதினெட்டுடையாள்’ என பாரதியின் பாடலை போல ஒரே சிந்தனையுடன் நாம் இருக்க வேண்டும். 2047ல் நமது 100வது சுதந்திர தினத்தில் உலகின் தலைசிறந்த நாடாக பாரதம் மாறி இருக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். நாட்டுக்கு பயன்படும் வகையிலான ஆராய்ச்சிகளை பி.எச்.டி மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்’ என்று பேசினார். மேலும், மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையும் எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘இந்த கூட்டம் ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும். தமிழகம் உயர் கல்வியில் சிறந்து விளங்குகிறது. தேசிய நிறுவனம் தரவரிசையில் 19 பல்கலைக்கழகம், 33 கல்லூரிகள் முதல் 100 இடங்களை பிடித்து உள்ளது. கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்’ என்றார்.